பெரும் நெருக்கடியில் இலங்கை உணவகங்கள்! மூடப்படும் நிலை ஏற்படுமா?
இலங்கையில் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் நிறுத்தப்பட்டதனால் உணவகங்களில் சமைத்த உணவுகள் இல்லாமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
உணவகத்தில் உணவுகள் சமைப்பதற்குக் கட்டாயம் எரிவாயு அவசிய மாகும் என சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். உணவகங்களில் எரிவாயு அடுப்புகள் மாத்திரமே உள்ளது.
இந்நிலையில் எரிவாயு கல வையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்ட சிலிண்டர்களின் விநியோகத்தை மாத்திரம் நிறுத்துமாறு லிட்ரோ நிறுவனத்திடம் கேட்டுக் கொள்கின்றோம் எனவும் அவர் கூறினார்.
இல்லையெனில் இன்று முதல் உணவக உணவு விநியோகம் முழு மையாக முடங்கிவிடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியால காலத்தில் நாடு முழுவதிலும் 20 இடங்களில் எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.