இலங்கை ஜனாதிபதி தேர்தல்; அனுர இன்று மாலையே பதிவியேற்பார் என எதிர்பார்ப்பு!
இலங்கையில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தல் முடிவுகளின் அறிவிப்புக்கள் இன்று மாலைக்கு முன்னர் நிறைவுக்கு வரும் என்றும், இன்று மாலை அநுரகுமார திஸாநாயக்க இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகப் பதவியேற்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க பெரும் வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றார்.
அதிகூடிய வாக்குகளுடன் முன்னிலை
நேற்று இரவு முதல் வெளியாகிக் கொண்டிருக்கும் தேர்தல் முடிவுகளின் பிரகாரம் அதிகூடிய வாக்குகளுடன் அவர் முன்னிலை வகிக்கின்றார். தபால் மூல வாக்களிப்பில் வடக்கு மாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் அநுரகுமார திஸாநாயக்க முதலிடம் பெற்றுள்ளார்.
இதேவேளை, மாவட்டங்களில் உள்ள பிரதேச தேர்தல் தொகுதிகளின் முடிவுகளும் இன்று அதிகாலை முதல் வெளிவரத் தொடங்கியுள்ளன. இந்தத் தேர்தல் முடிவுகளின் பிரகாரம் அநுரகுமார திஸாநாயக்க 50 சதவீதத்துக்கும் மேல் அதிகூடிய வாக்குகளைப் பெற்று வருகின்றார்.
இந்நிலையில் இரண்டாம் சுற்றுக்குக்குச் செல்லாமல் முதல் சுற்றிலேயே வாக்கு எண்ணும் பணிகள் நிறைவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இன்று மாலைக்கு முன்னர் தேர்தல் முடிவுகளின் அறிவிப்புக்கள் நிறைவுக்கு வரும் என்றும், இன்று மாலை அநுரகுமார திஸாநாயக்க இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகப் பதவியேற்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
அதேவேளை தற்போது வெளியாகிக் கொண்டிருக்கும் தேர்தல் முடிவுகளின் பிரகாரம் வடக்கில் தமிழ்ப் பொது வேட்பாளர் பாக்கியசெல்வம் அரியநேத்திரனுக்குக் கணிசமான வாக்குகள் கிடைக்கப் பெற்றுள்ளன.