வெளிநாடு சென்ற யாழ் குடும்பபெண் தொடர்பில் தகவலில்லை; தவிக்கும் குடும்பத்தினர்!
சவுதி அரேபியாவிற்கு தொழிலுக்கு சென்றிருந்த நிலையில் பெண் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அவரின் உறவினர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
39 வயதுடைய கோமதி பஞ்சலிங்கம் என்ற பெண்ணே காணாமல் போயுள்ளதாக குறித்த பெண்ணின் கணவர் தெரிவித்துள்ளார்.
இதனை யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண் காணாமல் போவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் தொலைபேசியில் உரையாடியதாகவும், வீட்டு உரிமையாளர் தன்னுடை கையடக்க தொலைபேசியை எடுத்துக்கொண்டு தர மறுத்ததாகவும் பின்னர் முரண்பாட்டுடன் பெற்றுக்கொண்டதாகவும் அறிவித்ததாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதோடு, பின்னர் தொடர்புகள் கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வீட்டின் உரிமையாளர்களிடன் வினவியதற்கு வீட்டின் உரிமையாளரான கணவன் மனைவி இருவரும் முரண்பட்ட பதிலை வழங்குவதாகவும் முறைப்பாட்டாளர் குறிப்பிட்டுள்ளார்.
முரண்பட்ட கருத்துக்கள்
வீட்டின் முன்வாசல் வழியாகவே தனது மனைவி தப்பிச்சென்றுள்ளதாக வீட்டு உரிமையாளரான பெண் தெரிவிக்கின்ற நிலையில் ஏணி ஒன்றின் உதவியுடன் தப்பிச்சென்றதாக வீட்டு உரிமையாளரான கணவர் தெரிவிப்பதாகவும் அவர் முறையிட்டுள்ளார்.
இலங்கையில் பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் தொழில் இன்மைக் காரணமாகவே தனது மனைவியை வெளிநாடொன்றிற்கு வீட்டுப்பணிப்பெண்ணாக அனுப்பிவைத்ததாகவும், அவரை மீட்டு தருவதற்கு அரசாங்கம் உதவி புரிய வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இரு பிள்ளைகளுடன் இலங்கையில் சிக்களுக்குரிய பொருளாதாரத்தில் ஜீவனோபாயத்தை கொண்டு செல்வது கடினம் என்பதோடு, தனது பிள்ளைகளுக்கு தாயின் அன்பு அத்தியாவசியமானது எனவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் அவர் முறைப்பாடு செய்துள்ளார்.