வெளிநாடொன்றில் கடும் சித்திரவதைக்குள்ளான இலங்கையர் தொடர்பில் வெளியான தகவல்
தென்கொரியாவில் இலங்கை தொழிலாளர் ஒருவர், அந்த நாட்டின் தொழிலாளர்களால் சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தென்கொரிய ஜனாதிபதி நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஜியோல்லாவின் நஜு என்ற நகரில் உள்ள செங்கல் தொழிற்சாலை ஒன்றில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. சக ஊழியர்களால் இலங்கையின் ஊழியர் கட்டி வைக்கப்பட்டு கேலிக்கு உள்ளாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக தாம் பல மாதங்களாகத் தொடர்ந்து அதிர்ச்சியால் அவதிப்படுவதாக, குறித்த இலங்கை ஊழியர் கூறும் காணொளி அதிகமாக பகிரப்பட்ட நிலையிலேயே, தென்கொரிய ஜனாதிபதி இந்த விடயத்தில் நடவடிக்கைக்கு உத்தரவிட்டுள்ளார்.
வேலைவாய்ப்பு அனுமதி முறையின் கீழ், 2024 இல் தென்கொரியாவுக்கு சென்ற குறித்த ஊழியர், சக ஊழியருக்கு தொழிலை உரிய முறையில் கற்றுக்கொடுக்கவில்லை என்று குற்றம் சுமத்தியே, ஏனைய ஊழியர்களால் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தை அறிந்த தென்கொரிய ஜனாதிபதி லீ ஜே மியுங், எந்தவொரு மனித உரிமை மீறலுக்கும் தமது நாட்டில் இடமில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.