சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த இலங்கையர் கைது
சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த இலங்கை நாட்டவர் ஒருவரைத் இராமேஸ்வரம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட 34 வயதுடைய இவர், தமிழ்நாட்டில் உள்ள இலங்கை அகதிகள் முகாம் ஒன்றில் தங்கியுள்ள தனது மனைவி மற்றும் உறவினர்களைச் சந்திப்பதற்காக இவ்வாறு வந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நபரும் குறித்த அகதிகள் முகாமில் தங்கியிருந்தவர் என்றும், சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர் சட்டபூர்வமாக இலங்கை சென்றுள்ளதாகவும் இந்தியப் பாதுகாப்புப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இராமேஸ்வரம் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில், மண்டபம் அகதிகள் முகாமுக்கு அருகில் உள்ள பூங்காவொன்றில் தங்கியிருந்த போது இவர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபரை அந்நாட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர், எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.