ரஷ்யாவின் உயரிய கௌரவத்தை பெற்ற இலங்கை தூதுவர் கலாநிதி சமன் வீரசிங்க
இலங்கை-ரஷ்ய நட்புறவுச் சங்கத்தின் பொதுச் செயலாளரும், ரஷ்ய புவியியல் சங்கத்தின் இலங்கைக்கான தலைவருமான கலாநிதி சமன் வீரசிங்கவுக்கு ரஷ்யாவின் மிக உயரிய சிவிலியன் விருதுகளில் ஒன்றான 'நட்புக்கான விருது' (Order of Friendship) வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவராகப் பணியாற்றிய கலாநிதி சமன் வீரசிங்க, இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்காக பல தசாப்தங்களாக மேற்கொண்ட முயற்சிகளை அங்கீகரிக்கும் விதமாக இந்த விருதைப் பெற்றார்.
விருதைப் பெற்றுக்கொண்ட பிறகு அவர் ஆற்றிய ஏற்புரையில், தனது பங்களிப்பை அங்கீகரித்த ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு நன்றி தெரிவித்தார்.

அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையிலான கலாசார, கல்வி மற்றும் மனிதாபிமான ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.
விருது வழங்கும் விழாவில் பேசிய ஜனாதிபதி விளாடிமிர் புடின், இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர புரிதலையும் ஒத்துழைப்பையும் வளர்ப்பதில் கலாநிதி சமன் வீரசிங்கவின் பங்கை வெகுவாகப் பாராட்டினார்.
"சமன் வீரசிங்க ரஷ்யாவுடனான கலாசார மற்றும் மனிதாபிமான உறவுகளை வலுப்படுத்துவதில் ஒரு சிறந்த பங்களிப்பைச் செய்தார்" என்று குறிப்பிட்டார். இந்த நிகழ்வு ரஷ்ய தேசிய ஒற்றுமை தினத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.