தந்தை மரணத்தின் பின் துபாய் புறப்பட உள்ள இலங்கை கிரிக்கெட் வீரர்
தந்தையின் திடீர் மரணத்தைத் தொடர்ந்து இலங்கைக்கு வந்த துனித் வெல்லாலகே, இலங்கை அணியில் இணைவதற்காக இன்று (19.09.2025) இரவு துபாய் புறப்பட உள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
ஆசிய கிண்ணத் தொடரின் போது அபுதாபியில் நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய பின்னர், தனது தந்தை சுரங்க வெல்லாலகேவின் மரண செய்தியை அறிந்த துனித் வெல்லாலகே, உடனடியாக இலங்கைக்கு திரும்பினார்.

இறுதி அஞ்சலி
இன்று காலை 8:25 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய அவர், தனது தந்தைக்கு இறுதி அஞ்சலி செலுத்திய பின்னர், சூப்பர் 4 சுற்றில் இலங்கை அணியுடன் இணைந்து கொள்ள இருக்கிறார்.
இலங்கை அணி இன்று இரவு துபாய் சென்று, நாளை (20) பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடக்கும் போட்டிக்கு தயாராகின்றது.
வெல்லாலகேவின் தந்தை, முன்னாள் பாடசாலை கிரிக்கெட் வீரராக இருந்த சுரங்க வெல்லாலகே (வயது 54), மாரடைப்பால் நேற்று உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.