மோசடிச் செயல்களை நியூசிலாந்து ஒருபோதும் சகித்துக்கொள்ளாது ; இலங்கை நிறுவனத்திற்கு அபராதம்
நியூசிலாந்தில் வாகன விற்பனையின் போது ஓடோமீட்டர் (odometer) அளவைத் திருத்தி மோசடியில் ஈடுபட்ட இலங்கை வம்சாவளி நிறுவனத்திற்கு எதிராக அந்த நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அதன்படி பாதிக்கப்பட்டவருக்கு இலங்கை நிறுவனம் இழப்பீடு வழங்க நியூஸிலாந்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நியூசிலாந்தின் மோட்டார் வாகன விற்பனை சட்டத்தின் கீழ், ஓடோமீட்டர் மோசடிக்காக தொடரப்பட்ட முதலாவது வழக்காக இது அமைந்துள்ளது.

மோசடிச் செயல்களை நியூசிலாந்து அரசாங்கம் ஒருபோதும் சகித்துக்கொள்ளாது
கிறைஸ்ட்சர்ச் நகரை தளமாகக் கொண்டு இயங்கும் 'கார்போரியம்' (Carporium) என்ற சிற்றுந்து விற்பனை நிலையம், 2024 பெப்ரவரி மாதம் டொயோட்டா ராவ் 4 (Toyota RAV4) ரக சிற்றுந்து ஒன்றை 24,000 நியூசிலாந்து டொலர்களுக்கு விற்பனை செய்துள்ளது.
குறித்த வாகனத்தை ஒக்லாந்து வாகன ஏலத்தில் வாங்கியபோது, அதன் பயன்பாட்டுத் தூரம் 150,031 கிலோமீட்டராகப் பதிவாகியிருந்தது. ஆனால், வாடிக்கையாளருக்கு விற்கும்போது அது 119,244 கிலோமீட்டராகக் குறைக்கப்பட்டிருந்தது.
இதன்படி, சுமார் 30,000 கிலோமீட்டர்களைத் திட்டமிட்டுத் திருத்தி, வாடிக்கையாளரை ஏமாற்றியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஒரு வருடத்திற்குப் பிறகு, வழக்கமான பராமரிப்புப் பணிகளின் போது பயன்பாட்டுப் பதிவுகளில் இருந்த குளறுபடியை தொழில்நுட்ப வல்லுநர்கள் கண்டறிந்தனர்.
இந்த நிலையில், நியூசிலாந்தின் வணிகம், புத்தாக்கம் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் நடத்திய விரிவான விசாரணையைத் தொடர்ந்து, இந்த வழக்கு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டது.
வழங்கப்பட்டுள்ள தீர்ப்பின் அடிப்படையில், குறித்த வாகனத்தை வாங்கிய அதே விலையான 24,000 நியூசிலாந்து டொலருக்கு மீண்டும் நிறுவனமே வாங்கிக் கொள்ள வேண்டும். நிறுவனத்தின் இயக்குநருக்கு மன உளைச்சலுக்கான இழப்பீடாக 1,000 நியூசிலாந்து டொலர் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
வாகன விற்பனை நிலையத்திற்கு 5,000 நியூசிலாந்து டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வாகனங்களின் மதிப்பு, தரம் மற்றும் பராமரிப்பு வரலாற்றைத் தவறாகக் காண்பித்து நுகர்வோரை ஏமாற்றும் இத்தகைய மோசடிச் செயல்களை நியூசிலாந்து அரசாங்கம் ஒருபோதும் சகித்துக்கொள்ளாது என்று நியூஸிலாந்து வணிகத்துறை அமைச்சு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.