வெளிநாடொன்றில் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கை இளைஞர்கள்!
ஜப்பானில் இடம்பெற்ற விபத்தில் இலங்கையைச் சேர்ந்த 2 இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விபத்து சம்பவம் கடந்த 12 ஆம் திகதி இரவு வேளையில் இடம்பெற்றதாக கூறப்படும் நிலையில், விபத்து தொடர்பில் 32 வயதான நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதான நபர் மதுபோதையில் வாகனத்தை செலுத்தியுள்ளதாக ஜப்பான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விபத்து இடம்பெற்றபோது வாகனத்திற்குள் 20 முதல் 30 வயது வரையான 7 பேர் இருந்துள்ளனர்.
மாத்தறையைச் சேர்ந்த இளைஞர்கள்
மாத்தறையைச் சேர்ந்த 26 வயதான நிசால் சாருக்க மற்றும் சிலாபம் பகுதியைச் சேர்ந்த 27 வயதான ரஜித்த லக்மால் ஆகியோரே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
நிசால் சாருக்க வேனைச் செலுத்தியுள்ளதுடன் விபத்தையடுத்து காயமடைந்த அவர் 3 நாட்களாக மயக்கமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். ரஜித்த லக்மால் விபத்து சம்பவிக்கும் போது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இந்த விபத்தில் 2 இலங்கையர்கள் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் நிஷால் சாருக்கவின் காதலியும் அடங்குவதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
காயமடைந்தவர்கள் தற்போது சிகிச்சைபெற்று வந்த நிலையில் ஆரோக்கியத்துடன் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை விபத்தில் உயிரிழந்த நிசால் சாருக்க கடந்த 6 வருடங்களாக ஜப்பானில் வசித்து வந்ததுடன், அங்குள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்ததாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் உயிரிழந்தவர்களின் சடலங்களை நாட்டுக்கு கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன.