திருமதி உலக அழகிப் போட்டியில் வெற்றிபெற்ற இலங்கை அழகி நாடு திரும்பினார்
அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடைபெற்ற சர்வதேச திருமணமான பெண்களுக்கான அழகிப் போட்டியில் வெற்றிபெற்ற சபினா யூசுப், இன்று அதிகாலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.
60 நாடுகளின் போட்டியாளர்கள் பங்கேற்ற இந்தப் போட்டியில் சபீனா யூசுப் மூன்றாவது இடத்தைப் பிடித்து இலங்கைக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

உற்சாக வரவேற்பு
அத்துடன் அவர் 'மிஸ் போட்டோ ஜீனி' (Miss Photo Genie/Photogenic) என்ற பட்டத்தையும் வென்றுள்ளார். அதிகாலை 2:45 அளவில் கட்டார் ஏர்வேஸ் (QR-662) விமானம் மூலம் நாடு திரும்பிய அவருக்கு, விமான நிலையத்தின் 'கோல்ட் ரூட்' (Gold Route) முனையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

போட்டித் தொடரின் தேசியப் பணிப்பாளர் சந்திமால் ஜயசிங்க, பயிற்சியாளர் ருக்மல் சேனநாயக்க மற்றும் ஏராளமான ஆதரவாளர்கள் இவரை மலர்மாலை அணிவித்து வரவேற்றனர்.
சபீனா யூசுப் கடந்த 2025 ஆம் ஆண்டு ஒக்டோபரில் 'திருமதி இலங்கை' பட்டத்தை வென்றிருந்தார். இரு குழந்தைகளின் தாயான இவர், நீர்கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.
சர்வதேச அரங்கில் இலங்கையின் பெருமையை நிலைநாட்டிய இவருக்குப் பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.