உணவு டின்களில் போதைப்பொருட்கள் ; பெங்களூரு விமான நிலையத்தில் சிக்கிய இலங்கையர்
இந்தியாவின் பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் 45.4 கிலோ உயர்ரக கஞ்சா மற்றும் 6 கிலோ சைலோசைபின் காளான்களுடன் இலங்கையர் ஒருவர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையில் இருந்து விமானம் மூலம் உயர்ரக போதை பொருள் கடத்தி வரப்படுவதாக பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையத்துக்கு தகவல் கிடைத்துள்ளது.
உணவு டின்களில் போதைப்பொருட்கள்
இந் நிலையில் கடந்த 9 ஆம் திகதி மேற்கொண்ட சோதனையில் இலங்கை விமானத்தில் வந்த சந்தேகத்திற்குரிய இருவரை பிடித்து அதிகாரிகள் விசாரணை செய்தனர். அவர்கள் வைத்திருந்த உணவு பொருட்கள் டின்களில் போதைப்பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை அடுத்து அவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.
கைதான 2 பேரும் தங்களது நண்பர் ஒருவர் மற்றொரு விமானத்தில் போதைப்பொருள் கடத்தி வருவதாக அதிகாரிகளிடம் தெரிவித்தனர். இதனை அடுத்து மற்றொரு விமானத்தில் வந்த பயணி, அவரது உடைமைகளை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
அந்த பயணியிடமும் போதைப்பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் இருந்து 14 கிலோ உயர்ரக கஞ்சா மற்றும் 2 கிலோ சைலோசைபின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.
கைதான 3 பேரிடமும் இருந்து கைப்பற்றப்பட்ட ஒட்டுமொத்த போதைப்பொருட்களின் இந்திய மதிப்பு 50 கோடி ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைதான 3 பேர் மீதும் விமான நிலைய பொலிஸ் நிலையத்தில் வழக்குப்பதிவாகியுள்ளது. அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.