தெற்காசியாவில் புதிய சட்டங்களைச் செயற்படுத்தும் நாடாக மாறிய இலங்கை! ரணில் பெருமிதம்
இலங்கை கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 75 புதிய சட்டங்களை நிறைவேற்றியுள்ளதாகவும் தெற்காசியாவில் புதிய சட்டங்களைச் செயற்படுத்தும் நாடாக இலங்கை மாறியுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும், புதிய அரசியல் கலாச்சாரத்தை இலங்கையில் உருவாக்கி வருவதாகவும் ஜனாதிபதி ரணில் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் திருடர்களைப் பாதுகாப்பதாக சிலர் குற்றம் சுமத்தினாலும் தற்போதைய அரசாங்கம் திருடர்களைப் பிடிப்பதற்காக சட்டங்களை கொண்டு வந்துள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி,
ஊழல் ஒழிப்பை அரசியல் கோசமாகக் பயன்படுத்தும் யுகம் முடிவுக்கு வரும் எனவும் தெரிவித்தார்.
தெல்தெனிய புதிய நீதிமன்ற கட்டடத் தொகுதியை இன்றையதினம் (15-05-2024) காலை திறந்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றும்போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு நாட்டின் ஸ்திரத்தன்மை சட்டத்தை அமுல்படுத்துவதில் தங்கியுள்ளது என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, ஒரு நாடு என்ற சர்வதேச அங்கீகாரம் சட்ட கட்டமைப்பின் செயற்பாட்டில் அடங்கியுள்ளது என்றும் தெரிவித்தார்.