இருளில் மூழ்கப் போகும் இலங்கை
இலங்கையில் நாளாந்தம் இரண்டரை மணித்தியாலங்கள் மின் விநியோகத்தை தடை செய்யுமாறு மின்சக்தி எரிசக்தி அமைச்சு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மின்சார சபையின் மேலதிக பொது முகாமையாளர் ஹெந்தஹேவ இந்த தீர்மானத்தை மின்சக்தி அமைச்சின் செயலாளர் வசந்த பெரேராவுக்கு இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். இருப்பினும் மின் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையை சமாளிக்க அதே காலத்திற்கு நீடிக்கும் திட்டமிடப்படாத மின்வெட்டுகள் அமுல்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை ஒரு மணி நேர மின்வெட்டு மற்றும் 6 மணி முதல் இரவு 9 மணி வரை உச்ச நேரங்களில் 45 நிமிடங்களுக்கு இரண்டு முறை மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என மின்சாரசபை உயரதிகாரிகளை மேற்கோள் காட்டி, ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
டொலர் நெருக்கடி காரணமாக அனல் மின் நிலையங்களுக்கு எரிபொருள் வழங்குவதில் இருந்து இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் விலகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் நுரைச்சோலை நிலக்கரி அனல்மின் நிலையத்தின் மூன்றாவது அலகு மற்றும் கெரவலப்பிட்டி யுகதனவி ஆலையின் ஒரு பகுதி பராமரிப்புக்காக மூடப்பட்டமை மற்றும் களனிதிஸ்ஸ 115 மெகாவோட் எரிவாயு விசையாழி ஆலையில் ஏற்பட்ட பழுதினால் மின்வெட்டு அமுல்படுத்தப்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலையில் தினசரி உச்சநேரம் இரவு நேரம் தேவை சுமார்“ 2500 மெகாவோட் மற்றும் பகல் நேரத் தேவை சுமார் 2100 மெகாவோட் என்றாலும் இலங்கையின் ஆற்றல் தேவை சுமார் 48 ஜிகா வோட் ஆகும்.
பற்றாக்குறையை சமாளிக்க வேண்டுமானால் இரண்டரை மணிநேரம் மின்வெட்டு செய்யப்பட வேண்டும் என இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளருக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் பிரதிப் பொது முகாமையாளர் ஆர்அழககோன் அறிவித்திருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.