இலங்கையின் செயற்கைக்கோள் தொடர்பில் வெளியான தகவல் ; 13 வருட வதந்திக்கு முற்றுப்புள்ளி
சுப்ரீம் செட் தனியார் நிறுவனம் அனுப்பிய செயற்கைக்கோள் கிழக்கு திசையின் சுற்றுப்பாதையில் தற்போதும் இயங்கு நிலையில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்தத் திட்டத்திற்கு எந்த அரசாங்க நிதியும் பயன்படுத்தப்படவில்லை என சுப்ரீம் செட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் ஆர்.எம்.மணிவண்ணன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வதந்திக்கு முற்றுப்புள்ளி
இதன்படி, சுப்ரீம் செட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், கடந்த 13 ஆண்டுகளாகக் குறுகிய அரசியல் ஆதாயங்களுக்காகப் பரப்பப்பட்ட வதந்திகளை முறியடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் முன்னேற்றத்திற்கும், புத்தாக்கத் துறைக்கும் தொடர்ந்து பங்களிப்பதன் மூலம், சர்வதேச தரநிலையிலான வணிக விண்வெளித் துறையில் முன்னணி பங்காளராக சுப்ரீம் செட் நிறுவனம் செயல்படும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், முறையான புரிதல் இன்றி, மக்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கும் நபர்களின் அடிப்படையற்ற குற்றச்சாட்டுகள் மற்றும் அறிக்கைகளுக்கு தமது நிறுவனம் வருத்தம் தெரிவிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், நிறுவனத்தின் நற்பெயரை மேம்படுத்தி, இலங்கையின் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு தொடர்ந்து பங்களிப்பதற்கு உறுதிபூண்டுள்ளதாக சுப்ரீம் செட் நிறுவனத்தின் தலைவர் ஆர்.எம்.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.