பல முன்னணி வீரர்களை வீழ்த்திய ருமேஷ் தரங்க ; தோஹா டயமண்ட் லீக்கில் அபார வெற்றி
கட்டாரில் நேற்று (19) நடைபெற்ற தோஹா டயமண்ட் லீக் 2026 ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில், இலங்கையின் ருமேஷ் தரங்க பத்திரகே தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அபார வெற்றியைப் பெற்றுள்ளார்.
இரண்டு முறை உலக செம்பியனான கிரெனடாவின் எண்டர்சன் பீட்டர்ஸ், அமெரிக்காவின் கர்டிஸ் தோம்சன், இந்தியாவின் முன்னாள் ஒலிம்பிக் மற்றும் உலக செம்பியனான நீரஜ் சோப்ரா மற்றும் தற்போதைய உலக பட்டத்தை வென்ற டிரினிடாட் மற்றும் டொபாகோவின் கேஷோர்ன் வோல்காட் உள்ளிட்ட ஈட்டி எறிதல் விளையாட்டின் முன்னணி வீரர்களை ருமேஷ் தரங்க தோற்கடித்துள்ளார்.

அதிக தூரம்
இரண்டு வாரங்களுக்கு முன்பு ரோமில் அவர் நிலைநாட்டிய உலக அளவில் முன்னிலையிலுள்ள தனது தனிப்பட்ட சிறந்த சாதனையான 92.62 மீட்டரை எட்டவில்லை என்றாலும், தனது நான்காவது முயற்சியில் 88.68 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து முதலிடத்தைப் பிடித்தார்.
ஆண்டர்சன் பீட்டர்ஸ் 86.38 மீட்டர் தூரம் எறிந்து இரண்டாம் இடத்தைப் பிடித்ததுடன், அமெரிக்காவின் உலக வெண்கலப் பதக்க வெற்றியாளரான கர்டிஸ் தாம்சன் மூன்றாம் இடத்தைப் பிடித்தார்.
சிறந்த ஃபார்மில் இருக்கும் ருமேஷ் தரங்க பத்திரகே தனது நான்காவது முயற்சியில் 88.68 மீட்டர் தூரத்தை எறிந்ததுடன், எண்டர்சன் பீட்டர்ஸை விட இரண்டு மீட்டருக்கும் அதிகமான தூரம் முன்னிலை பெற்று இந்த வெற்றியைப் பெற்றுள்ளார்.