புலம்பெயர் தொழிலாளர்களால் இலங்கைக்கு கிடைத்த இலாபம்!
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மூலம், கடந்த 10 ஆண்டுகளில், இலங்கைக்கு 67,147 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைத்துள்ளதாக வெளிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
2015 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு மே மாதம் வரையான காலப்பகுதியிலேயே, குறித்த தொகை கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில், வாய்மொழி கேள்வி பதிலுக்கான நேரத்தின்போது, இலங்கை மத்திய வங்கியின் பதிவுகளை மேற்கோள் காட்டி பிரதி அமைச்சர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
இதனிடையே, 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி 25ஆம் திகதி நிலவரப்படி, வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை சுமார் 13 இலட்சத்து 45 ஆயிரத்து 801 எனவும் வெளிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.