இலங்கை ஏற்றுமதித் துறையில் பதிவான அதிரடி வளர்ச்சி
2026ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருமானம் 12 பில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையான காலப்பகுதியில் மொத்த ஏற்றுமதி வருமானம் 12.01 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

ஏற்றுமதித் துறை
இது 2025ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் பதிவான 11.52 பில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடுகையில் 4.26 சதவீத வளர்ச்சியாகும்.
இந்தக் காலப்பகுதியில் பொருட்கள் மற்றும் சேவைகள் ஆகிய இரு ஏற்றுமதித் துறைகளிலும் வளர்ச்சி பதிவாகியுள்ளது.
பொருட்கள் ஏற்றுமதி வருமானம் 3.63 சதவீதம் அதிகரித்து 9.41 பில்லியன் டொலர்களாகவும், சேவைகள் ஏற்றுமதி வருமானம் 6.59 சதவீதம் அதிகரித்து 2.60 பில்லியன் டொலர்களாகவும் பதிவாகியுள்ளது.
இதனிடையே, 2026ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மாத்திரம் மொத்த ஏற்றுமதி வருமானம் 1.60 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.
இது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் 1.77 சதவீத அதிகரிப்பாகும்.
ஆகஸ்ட் மாதத்தில் சேவைகள் ஏற்றுமதி வருமானம் 13.97 சதவீதம் அதிகரித்து 331.87 மில்லியன் டொலர்களாக பதிவாகியுள்ளதுடன், பொருட்கள் ஏற்றுமதி வருமானம் 1.27 பில்லியன் டொலர்களாக பதிவாகியுள்ளது.
சர்வதேச சந்தையில் இலங்கையின் நிலையை மேலும் வலுப்படுத்துவதற்கும், நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்றுமதித் துறையின் பங்களிப்பை அதிகரிப்பதற்கும் இந்த வளர்ச்சி முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.