இலங்கை வரலாற்றின் மிகவும் மோசமான ஊழல்வாதி அநுர ; உதய கம்மன்பில
இலங்கை வரலாற்றின் மிகவும் மோசமான ஊழல்வாதியான ஒரு ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்கவே இருப்பார் என பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
நுகேகொடையில் நேற்று(21) இடம்பெற்ற பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

எனக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யுங்கள்...
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
நான் கூறுவது பொய் எனில் எனக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யுங்கள். ஆதாரங்களுடன் அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களை என்னால் நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியும் என உதய கம்மன்பில தெரிவித்தார்.
அரசாங்கத்தின் பொய்கள் தற்போது வெளிவர ஆரம்பித்துள்ளன. மக்கள் இன்னும் தாய் நாட்டை நேசிக்கின்றனர் என்பது இன்று நிரூபணமாகியுள்ளது. இதற்கு முன்னர் எந்த ஒரு அரசாங்கமும் எதிர்க்கட்சியின் பேரணிக்கு இந்த அரசாங்கத்தை போன்று அஞ்சவில்லை.
எமது எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடர்பில் அறிவித்த அன்றைய நாள் முதல் ஆளுங்கட்சியில் உள்ள ஒவ்வொருவருக்கும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவே இதனால் அதிகளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றார்.
அதனால் எங்கு சென்றாலும் நுகேகொடை, 21 என்ற இரு வார்த்தைகளையும் மறக்காமல் கூறுகின்றார். எதிர்க்கட்சிகள் பிளவடைந்திருப்பதால் தொடர்ந்தும் நான்கு ஆண்டுகளுக்கு பொய்களைக் கூறி ஆட்சியை முன்னெடுக்கலாம் என்று அரசாங்கம் திட்டமிட்டது. ஆனால் நாங்கள் உங்கள் கனவை கலைத்து விட்டோம். இந்த அரசாங்கத்தின் முடிவை ஆரம்பிக்கும் தினம் இன்றாகும் என குறிப்பிட்டார்.