பிரிக்ஸ் அமைப்பில் இணைய விண்ணப்பித்துள்ள இலங்கை
பிரிக்ஸ் அமைப்பில் இணைவதற்கான இலங்கையின் விண்ணப்பம், வளர்ந்துவரும் நாடுகளின் நலன்களைப் பாதுகாக்கும் பன்முகத் தளத்தின் செயற்திறன் உள்ளடக்கிய தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பெய்ஜிங் வெளிநாட்டு ஆய்வுகள் பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுகள் மற்றும் இராஜதந்திரப் பள்ளியின் பேராசிரியரான சோங் வெய்யை (Song Wei) மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன.
மந்தமான உலகப் பொருளாதாரத்தின் மத்தியில், பிரிக்ஸ் அமைப்பானது குறிப்பாக இலங்கை போன்ற நாடுகளின் பொருளாதார வளர்ச்சி மற்றும் அபிவிருத்திக்கான பாதைகளை வழங்கும் ஆற்றலில் முன்னிலை வகிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரிக்ஸ் அமைப்புடனான இந்த உறவு நிலையானது, வேகமாக மாறிவரும் உலகின் முன்னேற்றம் மற்றும் ஒத்துழைப்பிற்கான புதிய வாய்ப்புகளை பயன்படுத்துவதற்கான இலங்கையின் மூலோபாய நகர்வை பிரதிபலிப்பதாக பேராசிரியரான சோங் வெய் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையைத் தவிர மலேசியா, பெலாரஸ் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளும் பிரிக்ஸ் அமைப்பில் இணைவதற்கு விண்ணப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே, ரஷ்யாவின் கசான் (Kazan) நகரில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் உச்சி மாநாட்டில், உறுப்புரிமைக்கான கோரிக்கையை இலங்கை பதிவு செய்ய உள்ளதாக வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் முன்னதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.