இலங்கை சிறைச்சாலைகளில் பரவும் நோய் ; கைதிகள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை
நாட்டிலுள்ள அனைத்துச் சிறைச்சாலைகளிலும் 21 வயதுக்கும் 42 வயதுக்கும் இடைப்பட்ட கைதிகளுக்குத் தட்டம்மை நோய்க்கான தடுப்பூசியை வழங்க சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இதன் முதற்கட்டமாக, வெலிக்கடை, மெகசின் மற்றும் கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலைகளில் உள்ள சுமார் 1,500 கைதிகளுக்குத் தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாகச் சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான எஸ்.கே. பல்லேதன்ன தெரிவித்துள்ளார்.

தட்டம்மை நோய்த் தொற்று
குறித்த சிறைச்சாலைகளில் கடந்த சில நாட்களாகப் பல கைதிகளுக்குத் தட்டம்மை நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, நோய் மேலும் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் இந்தத் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
வெலிக்கடை சிறைச்சாலையில் எட்டு ஆண் கைதிகளுக்கும், ஏழு பெண் கைதிகளுக்கும் தட்டம்மை நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, கைதிகளை நீதிமன்றங்களுக்கு அழைத்துச் செல்வதைத் தற்காலிகமாக நிறுத்துவது உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பல்லேதன்ன குறிப்பிட்டுள்ளார்.
உலக சுகாதார நிறுவனம் 2017ஆம் ஆண்டில் இலங்கையில் தட்டம்மை நோய் ஒழிக்கப்பட்டதாக அறிவித்திருந்தது.
எனினும், கொரோனா தொற்றுக் காலத்தில் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளில் ஏற்பட்ட தடங்கல்களைத் தொடர்ந்து, மீண்டும் இந்நோய் பரவத் தொடங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.