அமைச்சரவையில் ஏற்பட்டுள்ள மற்றுமொரு அதிரடி மாற்றம்! இருவருக்கு புதிய பதவி
அரசியலமைப்பின் 47 (2) அத்தியாயத்திற்கமைய வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கத்தை பயன்படுத்தி ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ (Gotabaya Rajapaska) வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில (Udaya Gammanpila), கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச (Wimal Weerawansa) ஆகியோரை இன்று முதல் அமுலாகும் வகையில் அமைச்சு பதவிகளில் இருந்து அதிரடியாக நீக்கியுள்ளார்.
அமைச்சரவை கூட்டுப்பொறுப்பிற்கு முரணாக செயற்பட்டு அரசாங்கத்தை விமர்சித்ததன் காரணமாக வலுசக்தி அமைச்சர் உதயகம்மன்பில, கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச ஆகியோர் அமைச்சு பதவிகளில் இருந்து நீக்கப்பட்டதாக அமைச்சர்கள் குறிப்பிட்டனர்.

அமைச்சரவை கூட்டுப்பொறுப்பிற்கு முரணாக செயற்படும் அமைச்சர்களுக்கும், அரசாங்கத்தில் இருந்துக்கொண்டு அரசாங்கத்தை விமர்சிக்கும் தரப்பினருக்கு எதிராகவும் இனி கடுமையான நடவடிக்கையினை முன்னெடுக்குமாறு அமைச்சரவை உறுப்பினர்களும், இராஜாங்க அமைச்சர்களும் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளனர்.
அனைத்து தரப்பினரது கருத்துக்களையும் ஆராய்ந்து ஜனாதிபதி அமைச்சரவையினை மறுசீரமைத்துள்ளார். அதன்படி, புதிய வலுசக்தி அமைச்சராக காமினி லொக்குகே (Gamini Lokuge) சத்தியபிரமாணம் மேற்கொண்டுள்ளார். வலுசக்தி அமைச்சராக உதய கம்மன்பில பதவி வகித்திருந்தார்.

இந்த நிலையில், அந்தப் பதவிக்கு காமினி லொக்குகே நியமிக்கப்பட்டுள்ளார். அதேநேரம், புதிய மின்சக்தி அமைச்சராக, பவித்ரா வன்னியாராச்சி (Pavithra Wanniarachchi) சத்தியபிரமாணம் மேற்கொண்டுள்ளார். காமினி லொக்குகே, மின்சக்தி அமைச்சராக பதவி வகித்திருந்தார்.
புதிய கைத்தொழில் அமைச்சராக எஸ்.பி. திஸாநாயக்க (S. B. Dissanayake), ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் மேற்கொண்டுள்ளார்.
முன்னதாக கைத்தொழில் அமைச்சராக பதவி வகித்த விமல் வீரவன்ச அந்தப் பதவியிலிருந்து ஜனாதிபதியால் நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது..