இலங்கையில் பயங்கர விபத்து சம்பவங்கள்: 7 பேர் உயிரிழப்பு! 15 பேர் படுகாயம்
இலங்கையில் பல இடங்களில் பொசன் தினம் மற்றும் மறுநாள் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 15 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கண்டி - யாழ்ப்பாணம் வீதியில் மாத்தளை கொங்கஹமுல பிரதேசத்தில் பேருந்தும் முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளதாக மாத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில் வத்தேகம மீகம்மன வடக்கு பகுதியைச் சேர்ந்த 57 மற்றும் 17 வயதுடைய இரண்டு பெண்களே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை முச்சக்கரவண்டியில் பயணித்த தாய், தந்தை மற்றும் மகள் மற்றும் முச்சக்கரவண்டியின் சாரதி ஒருவரும் காயமடைந்து மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சாரதியின் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து, ஹம்பகமுவ லிஹினகல தம்வெலோதய வீதியின் லிஹினகல பகுதியில் மோட்டார் சைக்கிளுடன் மோதுண்ட பாதசாரி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தில் தம்வெலோதய பிரதேசத்தைச் சேர்ந்த 73 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, கொழும்பு புத்தளம் வீதியின் ஜயபிம பகுதியில் பேருந்தும் உழவு இயந்திரமும் மோதியதில் உழவு இயந்திரத்தின் சாரதி உட்பட 10 பேர் காயமடைந்துள்ளதுடன் அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த விபத்தில் கிரிபாவைச் சேர்ந்த 58 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.
அநுராதபுரம் பாதெனிய ஏ28 பிரதான வீதியில் தலாவ விவசாய சேவை நிலையத்திற்கு முன்பாக இன்று (23) காலை முச்சக்கரவண்டியும் பஸ்ஸொன்றும் நேருக்கு நேர் மோதியதில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இரு இளைஞர்கள் படுகாயமடைந்து அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரென பொலிஸார் தெரிவித்தனர்.
எப்பாவல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மடியாவ பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய சுசந்த குமார பெரேரா, சுபுன் சாலிந்த பெரேரா, 24 வயதான கவிந்து மதுஷன் பத்மசிறி என்ற இரு இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
அநுராதபுரத்தில் நேற்றிரவு (22-06-2024) இடம்பெற்ற “புரவர உதணய” பொசன் நிகழ்வில் கலந்து கொண்டு இளைஞர்கள் குழு வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.