இலங்கை ஹெலிகொப்டர் விபத்து ; படுகாயமடைந்த இராணுவ வீரர்கள் தொடர்பில் வெளியான தகவல்
இலங்கை விமான படைக்குச் சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டர் ஒன்று மாதுறு ஓயா நீர்த்தேக்கத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்து பொலன்னறுவை பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஆறு இராணுவ வீரர்களின் உடல்நிலை தேறி உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதன்படி, தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஆறு இராணுவ வீரர்களும் தற்போது பொது சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
விபத்து தொடர்பில் விசாரணை
இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பெல் 212 ஹெலிகாப்டர் ஒன்று நேற்று (09) மதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தின் போது ஹெலிகொப்டரில் இருந்த 2 விமானிகள் உட்பட 12 பேர் மீட்கப்பட்டு அரலகங்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பொலன்னறுவை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
பொலன்னறுவை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டவர்களில் இரண்டு (Air Gunners) வான்வழி துப்பாக்கி வீரர்கள் மற்றும் நான்கு இராணுவ விசேட படை வீரர்கள் உட்பட 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தனர்.
இந்த விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு விமானப்படைத் தளபதி தலைமையிலான 9 பேர் கொண்ட விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.