ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கு நியமிக்கப்பட்டுள்ள புதிய பொதுச்செயலாளர்!
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சாரதி துஷ்மந்த மித்ரபால தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று (11-09-2023) இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அவசர மத்திய செயற்குழு கூட்டத்தில் குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கட்சியிலிருந்து நீக்கப்பட்டதன் பின்னர் முதன் முறையாக இன்று மத்திய செயற்குழு கூடியது.
கட்சியின் உறுப்புரிமையிலிருந்து தம்மை நீக்கும் தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானத்தை ரத்து செய்யக்கோரி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி மனுவொன்றை தாக்கல் செய்திருந்த நிலையில், அதனை நீதிமன்றம் நிராகரித்தது.
அத்துடன், பதில் பொதுச்செயலாளர் பதவிக்கு நியமிக்கப்பட்ட சரத் ஏக்கநாயக்க அந்த பதவியில் செயற்படுவதற்கு நீதிமன்றம் தடைப்பிறப்பித்தது.
இவ்வாறான சூழலில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.