அக்டோபர் மாதத்திற்கு பின் புதிய சகாப்தத்திற்குள் பிரவேசிக்கும் இலங்கை
அக்டோபர் மாதத்திற்கு பின்னர் இலங்கை ஒரு புதிய சகாப்தத்திற்குள் பிரவேசிக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.
நாட்டில் தற்போது எரிபொருளுக்கு தட்டுப்பாடில்லை அது குறித்து மக்கள் எந்தவித சந்தேகமும் தேவையற்ற பீதியையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் எனவும் அவர் கூறினார்.
அத்துடன் ,நாட்டில் அந்நிய செலாவணி நெருக்கடி நிலை உண்டு என்றும், அது இரகசியமல்ல எனவும் குறிப்பிட்ட அமைச்சர், அந்நிய செலாவணி நெருக்கடிக்கு முக்கிய காரணம், இரண்டு வருடங்களாக சுற்றுலாத்துறையில் ஏற்பட்ட வீழ்ச்சியினால் சுமார் 7 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை நாடு இழந்ததே அதற்கு காரணம் எனவும் குறிப்பிட்டார்.
அத்துடன், வரும் காலாண்டில் சுற்றுலாத்துறை மீண்டும் வளர்ச்சியடைந்து, அதன் மூலம் அந்நிய செலாவணி வருமானம் அதிகரிக்கும். இதனூடாக இலங்கை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
இதனால் நாட்டிற்கு கிடைக்கின்ற வெளிநாட்டு முதலீடுகள் மூலம் நாடு மீண்டு வரும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.
ஜனாதிபதி தலைமையில் இரண்டு வாரங்களுக்கு முன்பு கூடிய கொவிட் கட்டுப்பாட்டு பணிக்குழுவின் கூற்றுப்படி, இந்த நோயின் பாதிப்புக்கு உள்ளாகும் முப்பது வயதிற்கு மேற்பட்ட அனைவரும் இரண்டாவது டோஸ் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டு இரண்டு வாரங்களின் பின்னர் அவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என நாட்டின் மருத்துவர்கள் கருதுகின்றதாகவும் அவர் தெரிவித்தார்.
எனினும் நாளை நடைபெறவுள்ள கொவிட் கட்டுப்பாட்டு பணிக்குழுவின் கூட்டத்தின் பின்னரே சரியான முடிவு அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார் .
மேலும் நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கையில் குறைவு, கொவிட் மரணங்களின் எண்ணிக்கையில் குறைவு மற்றும் ஒக்ஸிஜன் தேவைப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையில் குறைவு காணப்படுவதாகவும் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.