இரண்டு வங்கியிடமிருந்து கடன் உதவிகளை பெறமுடியும்! ரணில்
இலங்கையின் நெருக்கடி நிலைக்கு தீர்வு காணும் வகையில் உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து கடன் உதவிகளை பெற்றுக் கொள்ள முடியும். அதற்காக நிதியமைச்சர் நிறைவேற்று சபையுடன் பேச்சுவார்த்தை நடத்தி எமது நிதி நிலைமை தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டும்.
இந்த அரசியல் பிரச்சினைக்கு அப்பால் மக்களுக்கு பாரிய பிரச்சனை இருந்து வருகின்றது என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றம் இன்று (05-04-2022) காலை 10.00 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கைகள் இடம்பெற்றதைத்தொடர்ந்து, நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பாக குறிப்படுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
நாட்டில் இடம்பெறும் சம்பவங்கள் எனது பாராளுமன்ற வரலாற்றில் ஒருபோதும் காணாதவையாகும். ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளை மக்கள் சுற்றிவளைத்திருந்தனர்.
இந்நிலைக்கு நாடு சென்றிருக்கின்றது. இந்த நிலைமைய மாற்றவேண்டும். மக்கள் நிறைவேற்று அதிகாரியான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு (Gotabaya Rajapaksa) எதிராகவே குரல் கொடுக்கின்றனர். அந்த பிரச்சனையை அரசாங்கம்தான் தீர்க்கவேண்டும். அதனை எங்களால் செய்ய முடியாது.
ஆனால் நாடாளுமன்றம் என்ற வகையில் நாங்கள் எவ்வாறு முன்னுக்கு செல்வது என்பது தொடர்பாகவே இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும். இந்த அரசியல் பிரச்சனைக்கு அப்பால் பாரிய பிரச்சனை இருந்து வருகின்றது.
மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் இல்லை. எரிபொருள் இல்லை, காஸ் இல்லை, மின்சாரம் இல்லை. இந்த தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள எமக்கு டொலர் இல்லை. டொலரை எவ்வாறு பெற்றுக்கொள்வது என கலந்துரையாடவேண்டும்.
டொலரைப் பெற்றுக்கொள்ள நாட்டின் தற்போதைய கையிருப்பு டொலர் பில்லியன் இரண்டா அல்லது 600 மில்லியனா என்பதை நாடாளுமன்றத்துக்கு அறிவிக்கவேண்டும். அத்துடன் அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துக்கு செல்ல தீர்மானித்திருக்கின்றது.
ஆனால் அங்கு ஒரு பிரச்சனை இருக்கின்றது அதாவது, எமது நாட்டில் பொருளாதார பிரச்சினை இல்லை என எமது அதிகாரிகள் தெரிவித்திருப்பதாக நாணய நிதியத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வார்த்தையை ஆரம்பமாக நீக்கிக்கொள்ளவேண்டும். இதுதொடர்பாக நிறைவேற்று சபையில் கலந்துரையாடி பிரேரணை ஒன்றை நிறைவேற்றுங்கள் அவ்வாறு இல்லாமல் சர்வதேச நாணய நிதியத்துக்கு செல்வதில் பயனில்லை. அத்துடன் நாட்டின் நிதி நெருக்கடியை நிவர்த்தி செய்யும் வகையில் அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வதற்குத் தயாராகி வருகின்றது.
இந்தநிலையில் நிதியமைச்சர் நிறைவேற்று சபையுடன் பேச்சுவார்த்தை நடத்தி எமது நிதி நிலைமை தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டும். உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றின் மூலம் நாம் கடன்களைப் பெற்றுக் கொள்ள முடியும். இந்த நிதியின் மூலம் எமக்கு தேவையான மருந்து பொருட்களை பெற்றுக்கொள்ள முடியும்.
அத்துடன் சீனா, ஜப்பான், தென்கொரியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி நிதி உதவியைப் பெற்றுக்கொள்ளவும் முடியும். அதேவேளை நிதிக்குழுவின் தலைவர் வங்கிகளின் தற்போதைய நிலைமையை கவனத்திற்கொண்டு வங்கிகளைப் பாதுகாப்பதற்கான வலையமைப்பொன்றை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசாங்கம் அபிவிருத்திக்கான வரவு செலவுத்திட்டத்தை விடுத்து மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வரவுசெலவுத் திட்டம் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும்.
தற்போதைய நிலைமையில் ஜனாதிபதிக்கு செயற்படமுடியாமல் இருக்கின்றது. அதனால் நாடாளுமன்றம் என்றவகையில் நாட்டின் தேவைகளை மேற்கொள்ள நாங்கள்தான் தீர்மானங்களை மேற்கொள்ளவேண்டும் என்றார்.