எதிர்வரும் செவ்வாய் முதல் பதவியை தொடர மாட்டேன்! முக்கியஸ்தர் வெளியிட்ட தகவல்
இலங்கை மக்கள் எதிர்க்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கத்திற்கு எந்த மொழியில் விளங்கப்படுத்துவது என்பது அறிய முடியாதுள்ளது.
நாளை மறுதினம் மாத்திரம் பிரதி சபாநாயகர் பதவி வகிப்பேன். அரசாங்கத்தின் செயற்பாடுகள் முற்றிலும் வெறுக்கத்தக்கதாக உள்ளது என பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார்.
ருவன்வெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அரசாங்கத்திற்கு எதிராக மக்களின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைகிறதே தவிர குறைவடையவில்லை.நாட்டு மக்கள் முன்வைக்கும் கோரிக்கை மற்றும் அவர்களின் அபிலாசை குறித்து அரசாங்கம் பொருத்தமான தீர்மானங்களை இதுவரை முன்னெடுக்கவில்லை என்றே குறிப்பிட வேண்டும்.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் அரசாங்கத்தில் வகித்த அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சு பதவிகளை துறந்து நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படுகின்றனர்.
சுதந்திர கட்சி வசம் நாடாளுமன்ற பிரதி சபாநாயகர் பதவியும், பிரதி தவிசாளர் பதவியும் காணப்படுகிறது.
பிரதி சபாநாயகர் பதவி அரசாங்கத்தில் பதவியல்ல போதும் சுதந்திர கட்சியின் தீர்மானத்திற்கமைய அப்பதவியில் இருந்து விலக முன்னெடுத்த தீர்மானத்தை ஜனாதிபதிக்கு உத்தியோகப்பூர்வமாக அறிவித்தேன்.
இருப்பினும் ஜனாதிபதி எனது பதவி விலகல் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.
சமூக கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைக்கு தீர்வு காணும் விசேட நாடாளுமன்ற கூட்டத்தொடர் இடம்பெறும் வேளை பதவி விலகுவது நெருக்கடி நிலைமையினையும், நாடாளுமன்ற செயற்பாடுகளையும் மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும் என்ற காரணத்தினால் எதிர்வரும் 30ஆம் திகதி வரை பிரதி சபாநாயகர் பதவி வகிக்க தீர்மானித்தேன்.
நாட்டு மக்கள் எதிர்க்கொண்டு எதிர்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளை அரசாங்கத்திற்கு எந்த மொழியில் விளங்கப்படுத்துவது என்பது தெளிவற்றதாக உள்ளது.
பிரச்சினைக்கு சிறந்த முறையில் தீர்வு காணும் நோக்கம் அரசாங்கத்திற்கு கிடையாது என்ற காரணத்தினால் நாளை மறுதினம் மாத்திரம் பிரதி சபாநாயகர் பதவி வகிப்பேன்.
நாடாளுமன்றத்தின் அடுத்த கூட்டத்தொடர் எதிர்வரும் மாதம் கூடும் போது நிலையியல் கட்டளையின் பிரகாரம் பிரதிசபாநாயகர் தெரிவு இடம்பெற வேண்டும் என்றார்.
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        