நாடு முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் குவிக்கப்பட்டுள்ள பொலிஸ் - இராணுவம்!
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இலங்கை ழுழுவதும் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் பலத்த பாதுகாப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதைக் காணக்கூடியதாக உள்ளது.
இந்நிலையில், புத்தளத்தில் இன்று (24-12-2021) நள்ளிரவு தொடக்கம் இடம்பெறவுள்ள கிறிஸ்துமஸ் ஆராதனைகளுக்கு பெருந்திரளான மக்கள் வருகைத் தரவுள்ளனர்.
இதேவேளை, இன்று மாலை முதல் கிறிஸ்துமஸ் ஆராதனைகள் முடியும் வரையில் ஆலயங்களுக்கு வெளியில் பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட சர்வமத தலைவர் ஸென்மேரிஸ் ஆலயத்தின் பிரதான போதகர் கெனடி தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, ஆராதனைகளில் கலந்து கொள்ள ஆலயங்களுக்கு வருகைத் தருவர்களிடம் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த 2019ஆம் ஆண்டில் ஏப்ரல் 21 திகதி உயிர்த்த ஞாயிறன்று பயங்கரவாதிகளால் நடாத்தப்பட்ட தாக்குதலையடுத்து குறித்த பாதுகாப்பு சென்ற வருடம் போன்று இம்முறையும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக போதகர் மேலும் தெரிவித்தார்.