வாகன இறக்குமதியை கட்டுப்படுத்துவது தொடர்பில் இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட தகவல்
வாகன இறக்குமதியை கட்டுப்படுத்த எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை என இலங்கை மத்திய வங்கி வலியுறுத்தியுள்ளது.
வாகன இறக்குமதியை கட்டுப்படுத்துவது தொடர்பாக இலங்கை மத்திய வங்கிக்கும் மற்றும் திறைசேரிக்கும் இடையில் எந்தவொரு கடிதப் பரிமாற்றமோ அல்லது தொடர்பாடலோ இடம்பெறவில்லை என்று மத்திய வங்கியின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் கூறினார்.
திறைசேரிக்கு எச்சரிக்கை
நாட்டின் பொருளாதாரம் நெருக்கடியான நிலையில் இருந்து, மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியதைத் தொடர்ந்து, 5 ஆண்டுகளுக்குப் பின்னர், கடந்த பெப்ரவரி முதலாம் திகதி முதல் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக வாகன இறக்குமதி அனுமதிக்கப்பட்டது.
இதன்படி, கடந்த பெப்ரவரி முதல் கடந்த 5 மாதங்களில் வாகன இறக்குமதிக்காக 800 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு கடன் கடிதங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதில், இதுவரை 450 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறான பின்னணியில், வாகன இறக்குமதியை கட்டுப்படுத்துவதற்கு மத்திய வங்கி திறைசேரிக்கு எச்சரிக்கைகளை விடுத்துள்ளதாக வெளியான செய்தியை மத்தியவங்கி மறுத்துள்ளது.