இலங்கையை நெருங்கும் 'கானி' புயல் ; வடக்கு , கிழக்கு பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
மலேசியாவின் பிந்துலு (Bintulu) பகுதிக்கு வடக்காகப் இன்று புதன்கிழமை காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது எதிர்வரும் வெள்ளிக்கிழமை (27) மேற்கு மற்றும் வடமேற்குத் திசையில் நகர்ந்து அந்தமான் தீவுகளுக்குத் தெற்காகப் பயணிக்கவுள்ளதுடன், பின்னர் மத்திய வங்காள விரிகுடாவை அடையும் போது புயலாக வலுப்பெறக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
இந்தப் புயலுக்கு மாலைதீவினால் வழங்கப்பட்ட 'கானி' (Kaani) என்ற பெயர் சூட்டப்படவுள்ளது.
தற்போதைய வானிலை மாதிரிகளின் கணிப்புப்படி, இந்தப் புயல் எதிர்வரும் டிசம்பர் 05 ஆம் திகதி இரவு திருகோணமலை ஊடாகக் (கொட்டியாரக்குடாவுக்கு வடக்காக) கரையைக் கடந்து, பின்னர் மேற்கு நோக்கி நகர்ந்து வவுனியாவை ஊடறுத்து மன்னார் மற்றும் புத்தளத்தினூடாக அரபிக் கடலை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்புயலின் முழுப் பாதிப்பு வலயத்திற்குள் இலங்கை முழுவதும் உள்ளடங்குவதாகக் குறிப்பிடப்படுகின்ற போதிலும், இது இன்றைய நிலையில் மாதிரிகள் காட்டும் பாதை மாத்திரமே என்பதால் இதில் மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளதுடன், சில வானிலை மாதிரிகள் இந்தப் புயல் தமிழ்நாட்டில் கரையைக் கடக்கும் எனவும் காட்டுகின்றன.
எவ்வாறாயினும், புயல் கரையைக் கடக்கும் போது ஏற்படக்கூடிய பாதிப்புகளை எதிர்கொள்ள மக்களையும் நாட்டையும் முன்கூட்டியே தயார்ப்படுத்துவதற்குப் போதிய கால அவகாசம் அவசியமாகிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட பின்னர் புயலின் பாதை மாறி நாட்டுக்குப் பாதிப்பு ஏற்படாமல் போனாலும், முன்னேற்பாடுகளுடன் இருப்பது அவசியமானதாகும்.
எனவே, இந்தப் புயலின் நகர்வு, அது கரையைக் கடக்கும் இடம் மற்றும் சாத்தியமான பாதிப்புகள் குறித்து உரிய அரச திணைக்களங்கள் உன்னிப்பாக அவதானித்து, மக்களை உரிய முறையில் விழிப்பூட்ட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.