இலங்கையின் கறுப்பு ஜூலை: கனேடிய பிரதமர் வெளியிட்ட அறிக்கை
1983 யில் இடம்பெற்ற தமிழர்களின் இனக்கலவரமான கறுப்பு ஜூலையின் 39 ஆவது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கறுப்பு ஜூலையின் 39 ஆம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு பின்வரும் அறிக்கை வெளியிடப்படுகிறது.
கறுப்பு ஜூலையின் கொடூரமானவையும், வன்முறையானவையுமான சம்பவங்களில் உயிரிழந்தோரையும், இடம்பெயர்க்கப்பட்டோரையும் நாம் இன்று நினைவுகூருகிறோம்.
பல தசாப்தங்களாக நாடு முழுவதும் அமைதியின்மை நிலவி, பதற்றம் அதிகரித்த பின்னர், 1983 ஆம் ஆண்டு ஜூலையில் கொழும்பில் தமிழர்களுக்கு எதிரான வன்முறை இடம்பெற்றது.
கறுப்பு ஜூலை என அறியப்படும் இந்தக் கொடூரமான சம்பவங்கள் 26 வருட காலம் நீடித்த ஆயுதப் போரைத் தூண்டி, பத்தாயிரம் மரணங்களை ஏற்படுத்தி, தமிழர்களின் வீடுகளையும், வணிக நிறுவனங்களையும் அழித்து, லட்சக்கணக்கானோர் நாட்டை விட்டு வெளியேறக் காரணமாக அமைந்தன.
கறுப்பு ஜூலையின் பின்னரான மாதங்களில் இலங்கையில் இடம்பெற்ற வன்முறைக்காக நடவடிக்கை எடுப்பதற்குக் கனேடிய அரசு சிறப்பு ஏற்பாடுகள் செயற்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தியது.
1,800 க்கும் அதிகமான தமிழர்கள் கனடாவில் குடியமர்வதற்கு இது உதவியது. கறுப்பு ஜூலையில் உயிர் தப்பிய தமிழ்க் கனேடியர்கள் பலரைச் சந்திக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.
அவர்களது இழப்பு, இடப்பெயர்வு மற்றும் மீண்டெழும் தன்மை என்பன எனக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தின. தற்போது புலம்பெயர் தமிழர்கள் அதிகளவில் வசிக்கும் நாடுகளில் ஒன்றாகக் கனடா விளங்குகிறது என்றுள்ளது.