இலங்கையின் கடலோரப் பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட விசேட எச்சரிக்கை
பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலை தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் விசேட எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இன்று (28) முற்பகல் 11.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு, நாளை (29) முற்பகல் வரை அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காற்றின் வேகம்
இதன்படி, காங்கேசன்துறையிலிருந்து மன்னார், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடல் பகுதிகள் கொந்தளிப்பாகக் காணப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சிலாபத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடலோரப் பகுதிகளில் கடல் அலைகளின் உயரம் சுமார் 2.0 முதல் 3.0 மீற்றர் வரை உயரக்கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே, கடற்றொழிலாளர்கள் மற்றும் கடற்படைச் சமூகத்தினர் அதிக அவதானத்துடன் செயல்படுவதுடன், அடுத்தடுத்த உத்தியோகபூர்வ அறிவிப்புகளையும் தொடர்ந்து கவனிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.