இலங்கையில் இரு நாட்களுக்கு விசேட போக்குவரத்து சேவைகள்!
நாட்டில் எதிர்வரும் 14ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்காக தங்களது சொந்த இடங்களுக்குச் செல்பவர்களின் வசதிகளைக் கருத்திற் கொண்டு இன்றையதினம் (12-11-2024) முதல் விசேட போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இலங்கை போக்குவரத்து சபையினால் இன்றும் (12-11-2024) நாளையும் (13-11-2024), இந்த போக்குவரத்து சேவை முன்னெடுக்கப்படுகிறது.
இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ரமல் சிறிவர்தன இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அதிக பயணிகள் செல்லக் கூடிய வீதிகளில் இன்று மதியம் 12 மணி முதல் மேலதிக பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இதன்படி, இன்றைய தினம் 70 பேருந்துகள் மேலதிகமாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
மேலும், நாளைய தினம் 80 பேருந்துகளை மேலதிகமாக சேவையில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று தேர்தல் நடவடிக்கைகளுக்காக சுமார் 1,000 பேருந்துகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதுதவிர பொல்ஸாரின் போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக 200 பேருந்துகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ரமல் சிறிவர்தன தெரிவித்தார்.
நாளாந்தம் பயணிக்கும் ரயில்களை விடவும் தேர்தல் காலத்தைக் கருத்திற் கொண்டு மேலதிக ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் ரயில்வே திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் என்.ஜே.இந்திபொலகே தெரிவித்துள்ளார்.
ரயில்களுக்கான தேவைப்பாடு அதிகளவில் பதிவாகவில்லை.
எனினும் காங்கேசன்துறை வரையிலும் திருகோணமலை வரையிலும் பயணிக்கும் ரயில்களின் மேலதிக ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.
இதுதவிர நாளை மாலை, கண்டி வரையில் பயணிப்பதற்குத் ரயில் ஒன்று சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.
மேலும், எதிர்வரும் 16ஆம், 17ஆம் திகதிகளில் காங்கேசன்துறை வரை விசேட கடுகதி ரயில்களையும் சேவையில் ஈடுபடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் ரயில்வே திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் என்.ஜே.இந்திபொலகே தெரிவித்துள்ளார்.