அனைத்து தேவாலயங்களிலும் விசேட பாதுகாப்பு
இலங்கையில் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
பதில் பொலிஸ்மா அதிபர் பணிப்புரைக்கு அமைய இந்த விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
அதன்படி மேல் மாகாணத்தில் மாத்திரம் 6,500 இற்கும் அதிகமான உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனதுங்க தெரிவித்துள்ளார்.
2000க்கும் மேற்பட்ட தேவாலயங்களில் ஆராதனைகள்
அதேவேளை கிறிஸ்மஸ் தினத்தன்று நாடளாவிய ரீதியிலுள்ள 2000க்கும் மேற்பட்ட தேவாலயங்களில் ஆராதனைகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அந்தந்த பொலிஸ் பகுதிகளில் உள்ள சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள், உதவி பொலிஸ் கண்காணிப்பாளர், பொலிஸ் தலைமையகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் மற்றும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் தேவாலயங்களில் அமைக்கப்பட்டுள்ள சிவில் குழுக்களுடன் ஒருங்கிணைந்து தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிடப்படுவார்கள்.
உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் ஈடுபடுத்தப்படவுள்ளதாகத் தெரிவித்த பேச்சாளர், தேவைப்பட்டால் இராணுவத்தினரிடம் அல்லது ஏனைய பாதுகாப்புப் படையினரின் உதவியை பொலிஸார் நாடுவார்கள் எனவும் கூறியுள்ளார்.