மறைப்பாடசாலை இறுதிச் சான்றிதழ்ப் பரீட்சை தொடர்பில் விசேட அறிவிப்பு
கத்தோலிக்க மறைப்பாடசாலை இறுதிச் சான்றிதழ்ப் பரீட்சை - 2024 (2025) இன் விடைத்தாள் மீளாய்வுக்கான விண்ணப்பங்கள் இணையவழி (Online) ஊடாக மாத்திரம் கோரப்படுவதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே அறிவித்துள்ளார்.
விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான இறுதித் திகதி 2026.02.13 ஆகும் என விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீளாய்வுக்காக விண்ணப்பிக்க பின்வரும் ஏதேனும் ஒரு முறையை பின்பற்றலாம்: பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளமான www.doenets.lk இற்குச் சென்று, "Our Services" இலுள்ள "Exam Information Center" ஐ அழுத்தவும். https://onlineexams.gov.lk/eic என்ற இணையதளத்திற்கு நேரடியாகச் செல்லவும்.

உங்களிடம் ஏற்கனவே பயனர் கணக்கு (User Account) இருப்பின், "Personal Account Login" ஊடாக உள்நுழையவும். இல்லையெனில், பரீட்சைக்குத் தோற்றிய தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் தற்போது பயன்பாட்டிலுள்ள கைபேசி இலக்கத்தைப் பயன்படுத்தி கணக்கொன்றை ஆரம்பிக்கவும் (Register).
கைபேசி இலக்கத்திற்கு கிடைக்கும் கடவுச்சொல்லை (OTP) பயன்படுத்தி கணக்கிற்குள் நுழைந்து, "Catholic Daham Pasal Final Certificate Examination 2024 (2025) Application for Re-Scrutiny of Results" என்பதை அழுத்தவும்.
விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்வதற்கு முன்னர் தொழில்நுட்ப அறிவுறுத்தல்கள் (Technical Instructions), பொதுவான அறிவுறுத்தல்கள் (Common Instructions) மற்றும் வழிகாட்டி வீடியோவை பார்ப்பது அவசியமாகும்.
ஒரு பாடத்திற்கான மீளாய்வுக் கட்டணம் ரூபா. 250/= ஆகும். வரவு அட்டை (Debit Card) / கடன் அட்டை (Credit Card) அல்லது தபால் அலுவலகங்கள் ஊடாக கட்டணத்தைச் செலுத்தலாம். தபால் அலுவலகம் ஊடாக பணம் செலுத்தும் போது, இணையவழியில் பெற்றுக்கொண்ட குறிப்பு இலக்கத்தை (Reference No.) சமர்ப்பிக்க வேண்டும்.
பணம் செலுத்திய பின்னர், வழங்கப்பட்ட கைபேசி இலக்கத்திற்கு குறுஞ்செய்தி (SMS) ஒன்று அனுப்பப்படும். பணம் செலுத்துவதற்கான வாய்ப்பு ஒருமுறை மட்டுமே வழங்கப்படும் என்பதால், மீளாய்வு செய்ய வேண்டிய அனைத்துப் பாடங்களையும் தெரிவு செய்த பின்னரே கட்டணம் செலுத்தும் முறையைத் தீர்மானிக்க வேண்டும்.

பணம் செலுத்திய பின்னர் விண்ணப்பத்தை PDF வடிவில் தரவிறக்கம் (Download) செய்ய முடியும். அவ்வாறு தரவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தை கத்தோலிக்க மறைப்பாடசாலை அதிபர் அல்லது நிறுவனத் தலைவரின் பரிந்துரையுடன் பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்:
பரீட்சை ஆணையாளர் நாயகம், நிறுவன ரீதியான பரீட்சை மதிப்பீட்டுக் கிளை, இலங்கை பரீட்சைத் திணைக்களம், த.பெ. 1503, கொழும்பு. மீளாய்வு செய்யப்பட வேண்டிய அனைத்துப் பாடங்களையும் உள்ளடக்கி சரியாக விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பது விண்ணப்பதாரியின் பொறுப்பாகும். கட்டணம் செலுத்தப்படாத விண்ணப்பங்கள் எவ்வித அறிவித்தலுமின்றி நிராகரிக்கப்படும் என்பதுடன், செலுத்தப்பட்ட கட்டணம் எக்காரணம் கொண்டும் மீள வழங்கப்படமாட்டாது.
இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு: நிறுவன ரீதியான பரீட்சை மதிப்பீட்டுக் கிளை - 011- 2 785 105 / 011 - 2 786 235