நத்தார் பண்டிகையையொட்டி நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு
எதிர்வரும் நத்தார் பண்டிகையையொட்டி நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் ஒழுங்குப்படுத்தப்பட்டுள்ளன.
அதற்கமைய மேல் மாகாணத்தில் மாத்திரம் சுமார் 2500 மேற்பட்ட மேலதிக பாதுகாப்பு அதிகாரிகள் பணியமர்த்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி எப்.யு. வுட்லர் தெரிவித்தார்.

விசேட பாதுகாப்பு
பொலிஸ் ஊடகப் பிரிவில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்ட விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், டிசம்பர் மாதம் எதிர்வரும் வாரங்களில் அனைவரும் பண்டிகை காலத்தினுள் நுழைகிறோம்.
பண்டிகை மற்றும் விழாக்காலங்களில் உல்லாசப் பயணங்கள், யாத்திரைகள் போன்ற சுற்றுலாவுக்காக குடும்பமாக வெளியிடங்களுக்கு பயணிக்கின்றனர்.
வழிபாடுகள் மற்றும் ஏனைய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வெளிமாவட்டங்களுக்கு செல்வோர் தமது வீடு, நிறுவனங்கள் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு வலியுறுத்துகிறேன்.
அத்தோடு எதிர்வரும் நத்தார் பண்டிகையையொட்டி நாடளாவிய ரீதியில் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு மக்கள் அதிகளவில் சஞ்சரிக்கும் பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய பொலிஸார், முப்படையினர், அதிரடிப் படைப்பிரிவினரும் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். குறிப்பாக இம்முறை மேல்மாகாணத்தில் மாத்திரம் சுமார் 2500 க்கும் மேற்பட்ட மேலதிக பாதுகாப்பு அதிகாரிகள் பணியமர்த்தப்பட உள்ளனர்.
மேலும் நாட்டில் சுற்றுலாவுக்காக மக்கள் அதிகளவில் வருகை தரும் நீர் நிலைகள் அமைந்துள்ள 43 பகுதிகளில் உயிர் பாதுகாப்பு அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பழக்கமில்லாத மற்றும் அவதானம் மிக்க பகுதிகள் என அறிவித்தல் பலகை காட்சிப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் நீராடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கிறேன் என்றார்.