போதைப்பொருளுடன் அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு?
நாட்டில் இடம்பெறும் போதைப்பொருள் வியாபாரம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தெற்கின் அரசியல் வாதிகளுக்கு தொடர்பு இருக்கின்றமை குறித்து தகவல் கிடைத்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இன்று (22) பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
புலனாய்வு அமைப்புகள் அதிக அளவிலான தகவல்
பொதுமக்களிடமிருந்தும், புலனாய்வு பிரிவினரிடமிருந்தும் கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய அந்த விடயம் தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த கால அரசியல் கலாச்சாரம் காரணமாக ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் வலையமைப்புகள் பெருகியதாகவும் தற்போதைய அரசாங்கம் அதனை முற்றாக ஒழிப்பது தொடர்பில் விசேட கவனம் செலுத்தியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இன்றைய தினம் மாத்திரம் 3 பெரிய போதைப்பொருள் சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டதாக அவர் கூறினார். "நாட்டு மக்களுக்கு ஒரு சிறப்பு விஷயத்தைச் சொல்ல விரும்புகிறோம்.
போதைப்பொருள் மற்றும் திட்டமிட்ட குற்றங்கள் தொடர்பாக அரசியல் தொடர்புகள் இருப்பதாக சில தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளன. குறிப்பாக தெற்கில் உள்ள அரசியல்வாதிகள் இதில் ஈடுபட்டுள்ளனர்.
பொதுமக்கள் இப்போது தகவல்களை வழங்கி வருகின்றனர். பொலிஸார் தங்கள் கடமைகளை தீவிரமாகச் செய்து வருகின்றனர். புலனாய்வு அமைப்புகள் அதிக அளவிலான தகவல்களைப் பெறுகின்றன.
உங்களுக்குத் தெரிந்த எந்தத் தகவலையும் பொலிஸாருக்கு வழங்குமாறு பொதுமக்களிடம் நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம். அவ்வாறு தகவல் வழங்குபவர்களின் தனி நபர் உரிமை மற்றும் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.