சொமெட்டோ சர்ச்சை; தமிழர்களுக்கு யாரும் பாடம் நடத்த வேண்டிய அவசியமில்லை; கனிமொழி காட்டம்!
தமிழர்களுக்கு யாரும் பாடம் நடத்த வேண்டிய அவசியமில்லை என சொமெட்டோ (zomato) சர்ச்சை தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஆன்லைனில் உணவு டெலிவரி செய்யும் பெருநிறுவனங்களாக சொமெட்டோ (zomato), ஸ்விக்கி ஆகியவை செயல்பட்டுவருகின்றன.
இதற்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று சென்னையைச் சேர்ந்த விகாஷ் என்பவர் சொமெட்டோ (zomato) மூலம் உணவகத்தில் காம்போவாக உணவு ஆர்டர் செய்துள்ளார். ஆனால் அவருக்கு முழுமையாக உணவு டெலிவரி ஆகாததால் சொமெட்டோ கேர் எனப்படும் வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகி அவர் புகார் தெரிவித்துள்ளார்.
இதன்போது, சொமெட்டோ(zomato) தரப்பில், "உங்கள் புகார் குறித்து உணவகத்தைத் தொடர்புகொண்டோம், ஆனால் மொழி தெரியாததால் உங்களது பிரச்சினையைத் தீர்க்க முடியவில்லை எனக் கூறியதுடன், இந்தி நமது தேசிய மொழி. அதனால், ஒவ்வொருவருக்கும் ஓரளவாவது கண்டிப்பாக இந்தி தெரிந்திருக்க வேண்டும்" என்றும் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் குறித்த உரையாடல் பதிவை ட்விட்டரில் விகாஷ் பதிவிட சமூக வலைதளங்களில் அது வைரலாகப் பரவியதை அடுத்து சொமெட்டோ நிறுவனத்திற்குப் பல்வேறு தரப்பிலிருந்து கண்டனம் எழுந்தது.
குறித்த விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது ட்விட்டரில்,
குறிப்பிட்ட மொழிகளில் மட்டுமே சில நிறுவனங்களின் வாடிக்கையாளர் சேவை செயல்பட்டுவருகிறது. நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு மாநில மொழியில் பேசுவதைக் கட்டாயமாக்க வேண்டும். அத்துடன் வாடிக்கையாளர்களுக்கு இந்தி அல்லது ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. தமிழர்களுக்கு யாரும் யார் இந்தியர்கள் என்று பாடம் நடத்த வேண்டிய அவசியமில்லை" என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை சொமெட்டோ (zomato)ஊழியரின் உரையாடல் சர்ச்சையான நிலையில், இன்று வணக்கம் தமிழ்நாடு எனக் கூறி தமிழில் அறிக்கை வெளியிட்டு வாடிக்கையாளர் விகாஷுக்கு சொமெட்டோ நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது.
அதோடு , "வேற்றுமையில் ஒற்றுமை என்ற நம் நாட்டின் மாறுபட்ட கலாசாரத்தின் மீதான எதிர்கருத்தை வாடிக்கையாளரிடம் காட்டிய ஊழியரைப் பணிநீக்கம் செய்துள்ளோம். மேலும் உள்ளூர் தமிழர் அழைப்புதவி மையத்தை உருவாக்கும் பணியில் உள்ளோம்.
உணவு, மொழி ஒவ்வொரு மாநிலத்தின், கலாசாரத்தின் இரண்டு அடித்தளங்கள் என்பதை நாங்கள் புரிந்துவைத்துள்ளோம்" என்று குறிப்பிட்டுள்ளது. இந்த நிலையில் சொமெட்டோ(zomato) நிறுவனம் எடுத்த நடவடிக்கைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் வரவேற்புத் தெரிவித்துள்ளார்.
மேலும் "இது தமிழுக்கு கிடைத்த வெற்றி. இதை முன்னெடுத்த அனைவருக்கும் நன்றி " என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.