எதிர்காலத்தில் மேலும் தற்கொலைகள் பதிவாகலாம் – நாமல் கருணாரட்ன
எதிர்காலத்தில் மேலும் பலர் தற்கொலை செய்து கொள்ளக் கூடம் என விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் திடீர் மரணம் மற்றும் அது தொடர்பான தற்கொலைச் சந்தேக விவகாரங்களுக்கு மத்தியில், எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் எதிர்கொண்டுள்ள நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் தீர்ப்புகள் குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.
பிங்கிரிய பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே பிரதி அமைச்சர் இவ்வாறு கருத்துத் தெரிவித்தார்.
எதிர்க்கட்சியைச் சேர்ந்த பிரதிநிதிகள் பலர் ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், எதிர்காலத்திலும் இதுபோன்ற தற்கொலைச் சம்பவங்கள் பதிவாவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகத் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் பதிவான சில தற்கொலைச் சம்பவங்களை நினைவு கூர்ந்த பிரதி அமைச்சர், அதற்கு முன்னர் நிகழ்ந்த ஒரு தற்கொலைச் சம்பவத்தின் போது, சம்பந்தப்பட்ட நபர் தனது சொந்த கையெழுத்தில் எழுதிய கடிதங்களை நீதிமன்றத்திலும், லஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவிலும் சமர்ப்பித்திருந்ததாகக் குறிப்பிட்டார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு கார்டன் இல்லத்தில் வைத்து பல சந்தர்ப்பங்களில் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் லஞ்சப் பணம் குறித்தும், ஏர்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன்னாள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவிற்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் நிதிச் சலுகைகள் குறித்தும் அந்தக் கடிதங்கள் மூலம் அம்பலப்படுத்தப்பட்டிருந்ததை அவர் நினைவு கூர்ந்தார்.
முன்னாள் காவல்துறை மா அதிபரின் மரணமும் தற்கொலையாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் பின்னணியில், இந்தச் சம்பவம் எதற்காக நடந்தது என்பதைத் திட்டவட்டமாகக் கூற முடியாவிட்டாலும், எதிர்காலத்தில் இன்னும் எத்தனை பேர் இவ்வாறான முடிவுகளை எடுக்க நேரிடும் என்று கூற முடியாது எனவும் நாமல் கருணாரத்ன மேலும் தெரிவித்தார்.