ஆசிரியர் - அதிபர் சம்பள முரண்பாடு தொடர்பில் எடுக்கப்படவுள்ள தீர்வு
ஆசிரியர் - அதிபர் சம்பள முரண்பாடு மற்றும் சேவை நிலையில் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
இதற்கமைய கல்வி சபையை உருவாக்குவதற்கு கல்வி அமைச்சர் எதிர்வரும் வாரம் அமைச்சரவைக்கு நிருபம் சமர்ப்பிப்பார். அதனைத் தொடர்ந்து கல்வி ஆணைக்குழு ஸ்தாபிக்கப்படும். வெகுவிரைவில் முரண்பாடற்ற வகையில் ஆசிரியர் சேவை பிரமாணக் குறிப்பு தயாரிக்கப்படும் எனவும் சுட்டிகாட்டினார்.
பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (10) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
கல்விக்கு என்றும் முன்னுரிமை வழங்குவோம் என்பதை அதிகாரத்தில் இல்லாத போதும் குறிப்பிட்டோம், தற்போதும் அதே நிலையில் உள்ளோம். இந்த ஆண்டு ஆசிரியர் சேவையில் 7913 நியமனங்கள் வழங்கப்படும்.
அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர் சேவை தொடர்பில் குறிப்பிடப்பட்டது. இந்த விவகாரம் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே நீதிமன்றத்தின் தீர்மானத்துக்கு அமைவாகவே செயற்பட முடியும். அதிபர் சேவையில் 1610 வெற்றிடங்கள் காணப்படுகின்றன.
கடந்த ஜனவரி மாதம் நிர்வாக மட்டத்தில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வெற்றிடங்களை நிரப்புவதற்கு கல்வி அமைச்சு உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
அதேபோல் கல்வி நிர்வாக சேவையில் 1331 வெற்றிடங்கள் காணப்படுகின்ற நிலையில் 422 பேருக்கு நியமனங்களை வழங்குவதற்கு அரச சேவைகள் ஆணைக்குழுவின் அனுமதி கோரப்பட்டுள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் இந்த பதவிக்கான பரீட்சை நடைபெற்றது. இருப்பினும் நியமனங்கள் வழங்கப்படவில்லை.
ஆசிரியர் - அதிபர் சம்பள முரண்பாடு மற்றும் சேவை நிலையில் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கமைய கல்வி சபையை உருவாக்குவதற்கு கல்வி அமைச்சர் எதிர்வரும் வாரம் அமைச்சரவைக்கு நிருபம் சமர்ப்பிப்பார்.அதனைத் தொடர்ந்து கல்வி ஆணைக்குழு ஸ்தாபிக்கப்படும் என்றார்.