வீதியில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் அழையா விருந்தாளி! சம்பவத்தால் பரபரப்பு
ஹட்டன் நகரில் வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த Scooty ரக மோட்டார் சைக்கிளின் முன்பக்கப் பாதுகாப்புக் கவசத்திற்குள் பாம்பு ஒன்று புகுந்த சம்பவம் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் இன்று (13) மாலை 3.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஹட்டன் நகரில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றிற்குப் பொருட்கள் வாங்குவதற்காகச் சென்றிருந்த மோட்டார் சைக்கிளின் உரிமையாளர், தனது வாகனத்தை வீதியோரமாக நிறுத்திவிட்டுச் சென்றிருந்தார்.

பாதிப்பு ஏற்படவில்லை
அந்த நேரத்தில், மோட்டார் சைக்கிளின் முன்பக்கப் பாதுகாப்புக் கவசத்திற்குள் பாம்பு புகுந்துள்ளது. அவ்வழியால் சென்ற ஒருவர், கவசத்திற்குள் இருந்த பாம்பு தலையை வெளியே நீட்டியதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, அங்கிருந்தவர்களுக்குத் தகவல் வழங்கியுள்ளார்.
தகவல் அறிந்ததும் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் சம்பவ இடத்தில் திரண்டதால், அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
பின்னர், அங்கிருந்த சிலர் மிகவும் அவதானமாகச் செயற்பட்டு, மோட்டார் சைக்கிள் கவசப் பகுதியைச் சீரமைத்து, தடியொன்றின் உதவியுடன் பாம்பைப் பாதுகாப்பாக வெளியே எடுத்தனர். பாம்பிற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் ஹட்டன் புகையிரதப் பாதைக்கு அருகிலுள்ள புதர்ப்பகுதியில் அது விடுவிக்கப்பட்டது.
இச்சம்பவத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பு ஏற்படவில்லை. வாகனங்களுக்குள் பாம்புகள் புகும் சம்பவங்கள் அவ்வப்போது பதிவாகி வருவதால், நீண்ட நேரம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களை இயக்குவதற்கு முன்னர் அவற்றை நன்கு பரிசோதித்துக் கொள்வது அவசியம் ஆகும்.