இலங்கையில் இருந்து தங்கத்தை கடத்தி கடலில் வீசிய சம்பவம்! தொடரும் தேடுதல் நடவடிக்கை
இலங்கையிலிருந்து கடத்திவரப்பட்டதாக கூறப்படும் ஐந்து கிலோ தங்கத்தை கடலில் வீசிய விடயம் தொடர்பில் இன்று (07-06-2023) புதன்கிழமை 3-வது நாளாக தேடுதல் வேட்டை தீவிரம் அடைந்துள்ளது.
இராமநாதபுரம் கடல் பகுதி வழியாக போதைபொருட்கள், கடலட்டைகள், மஞ்சள் உள்ளிட்டவை இலங்கைக்கு கடத்தப்படுகின்றன.
இதேபோல் இலங்கையிலிருந்து தங்கக்கட்டிகள், தமிழ் நாட்டிற்கு கடத்தப்படுகின்றன.
இவ்வாறான நிலையில், நேற்று முன்தினம் இலங்கையிலிருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறையினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அதிகாரிகள் படகில் ரோந்து சென்றனர். மண்டபம் வேதாளை அருகே நடுக்கடலில் உள்ள நல்ல தண்ணீர் தீவு கடல் பகுதியில் சந்தேகப்படும்படியாக வந்த பைபர் படகை நிறுத்தி சோதனை செய்ய முயன்றனர்.
இருப்பினும், சுங்கத்துறையினரை கண்டதும் படகில் இருந்த கடத்தல்காரர்கள் படகை நிறுத்தாமல் வேகமாக சென்றனர்.
எனினும், சுங்கத்துறையினர் அந்த படகை பிடிக்க முயன்றனர்.
உச்சிப்புளி அருகே நொச்சியூரணி கடற்கரையில் உள்ள பாறையில் ஏற்றி படகை நிறுத்திவிட்டு, அதிலிருந்த கடத்தல்காரர்கள் 2 பேரும் கடற்கரையில் தயார் நிலையில் இருந்த ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் ஏறி தங்கக்கட்டிகளுடன் தப்பினர்.
மேலும் அவர்கள் தங்களிடம் இருந்த பையை படகில் வீசிச்சென்றனர். இதனிடையே அந்த படகில் சுங்கத்துறையினர் சோதனை செய்து அதிலிருந்த சுமார் ஐந்து கிலோ கடத்தல் தங்கக்கட்டிகளை பறிமுதல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
படகின் இயந்திரத்தையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் தப்பிய 3 பேரையும் சுங்கத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்த நிலையில், தப்பிச் சென்றவர்கள் வீசிய பையில் இருந்து மேலும் 5 கிலோ தங்கக் கட்டிகள் கடலில் விழுந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சுங்கத்துறையினர் கடலில் சங்கு குளிக்கும் மீனவர்கள் உதவியுடன் தீவிர தேடுதல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதன்கிழமை 3-வது நாளாக தங்கக் கட்டிகளை சுங்கத்துறை அதிகாரிகள் கடலோர காவல் படை, தூத்துக்குடி முத்து குளிக்கும் வீரர்கள் மற்றும் சுழியோடிகளின் உதவியுடன் தீவிரமாக தேடி வருகின்றனர்.