ரணிலுக்கு ஆதரவளித்த மொட்டு கட்சி உறுப்பினர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுகாற்று நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் மொட்டு கட்சியின் ஒரு தொகுதி உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக உறுதி அளித்துள்ளனர்.
ஒழுகாற்று நடவடிக்கை
இவ்வாறு உறுதியளித்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுகாற்று நடவடிக்கை எடுக்கப்படும் என கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கட்சி கடிதங்களை அனுப்பி வைக்க உள்ளதாக கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டதன் பின்னர் கட்சியின் உறுப்பினர்களது, கட்சி உறுப்புரிமை ரத்து செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நிலைப்பாடு குறித்தல் பேச்சுவார்த்தை நடத்தும் நோக்கில் அண்மையில் கட்சிக் கூட்டம் ஒன்று நடைபெற்றது.
ஜனாதிபதிக்கு ஆதரவு
அந்த கூட்டத்தில் கட்சியின் உறுப்பினர் ஒருவரை வேட்பாளராக களமிறக்க தீர்மானிக்கப்பட்டது.
எனினும், இந்த தீர்மானத்திற்கு கட்சியின் ஒரு தொகுதி உறுப்பினர்கள் எதிர்ப்பை வெளியிட்டு ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க தீர்மானித்தனர்.
இவ்வாறு தீர்மானித்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுகாற்று நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
ரணிலுக்கு ஆதரவான கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கட்சியின் அரசியல் சபை கோரி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.