முல்லைத்தீவில் அதிகாலை இடம்பெற்ற கொடூரம்; உறங்கிக்கொண்டிருந்த தம்பதியினர் கொலை
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியில், வீடொன்றில் உறங்கிக்கொண்டிருந்த தம்பதியினர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளனர். இன்று (24) அதிகாலை 2 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீடொன்றில் தந்தை, தாய் மற்றும் மகள் ஆகியோர் உறங்கிக்கொண்டிருந்த வேளையில், வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த இனந்தெரியாத நபர்கள் தந்தை மற்றும் தாயின் தலையில் பலமாகத் தாக்கியுள்ளனர்.

வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த இனந்தெரியாத நபர்கள்
இதன்போது மகள் கூச்சலிட்டதையடுத்து, அயலவர்கள் ஓடிவந்து அவர்களை மீட்டு மாங்குளம் ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றனர். எனினும், இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இக்கொலைச் சம்பவத்தை யார், எதற்காகச் செய்தார்கள் என்பது தொடர்பில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த மாங்குளம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும், தடயவியல் பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து பல கோணங்களில் விசாரணைகளை முடக்கிவிட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் தற்போது மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
