யாழ்.மாவட்ட பொலிஸாரை குறைகூறும் சிறிதரன் எம்.பி
யாழ்.மாவட்டத்தில் பொலிசாரின் செயற்பாடு மந்தகதியில் இடம் பெறுவதை அவதானிக்க முடிகின்றதாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.
யாழில் இன்று இடம்பெற்ற யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் சட்டவிரோத மணல் கடத்தல் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டபோது சிறிதரன் எம்.பி இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
யாழ்.மாவட்டத்தில் பொலிசாரின் செயற்பாடு மந்தகதியில்
அண்மைய நாட்களில் பொலிசாரின் செயற்பாட்டினை பார்க்கும்போது எதற்கு எடுத்தாலும் இராணுவத்தினரை பயன்படுத்த வேண்டும் எனக் கூறுகின்றார்கள். குறிப்பாக யாழ்.மாவட்டத்தில் பொலிசாரின் செயற்பாடு மந்தகதியில் இடம் பெறுவதும் ஒரு காரணமாக இருக்கலாம்.
அதாவது இராணுவத்தினை யாழில் தொடர்ச்சியாக இங்கே நிலைநாட்டுவதற்காக கூட இந்த செயற்பாடுகள் அமைந்திருக்கலாம். கொழும்பில் ஜனாதிபதிக்கு எதிராக ஒருவர் முகப்புத்தகத்தில் பதிவிட்டால் உடனே கைது செய்கின்றார்கள். போராட்டம் நடத்தினால் கைது செய்கிறார்கள்.
ஆனால் யாழ்ப்பாணத்தில் அச்சுறுத்தும் வகையில் பட்டப்பகலில் கூடி கேக் வெட்டியவர்களை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டபோதும் இன்று வரை 8 பேரை மட்டுமே பொலிஸார் கைது செய்துள்ளார்கள்.
இதிலிருந்து பொலிசாரின் செயற்பாடு மிக மந்தகதியில் உள்ளமை தெரிகின்றதாக கூறிய சிறிதரன் எம்.பி, யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரை நிலை நாட்டுவதற்காகவே பொலிசார் இவ்வாறு செயல்படுகிறார்களா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார்.
எனவே இந்த விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லாதுவிட்டால் பொலிஸ் அதிகாரத்தினை மாகாணத்திடம் தாருங்கள் எனவும் சிறிதரன் எம்.பி கோரினார்.
சிறீதரனின் கருத்தை நிராகரித்த பொலிஸார்
அதேவேளை பொலிஸ் வேலை என்பது சில்லறை கடைபோன்றது நிறைய பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிவரும். ஆகவே மணல் கடத்தல் விடயத்தினை மாத்திரம் கண்காணித்துக் கொண்டிருக்க முடியாது.
சாதாரண மக்கள் சாதாரண பிரச்சினைகளுக்கும் பொலிஸ் நிலையத்தை நாடுகின்றனர்.
மக்களுக்கு நிறைய பிரச்சனை உள்ளது நாங்கள் உயிரை பணயம் வைத்து தான் பொலிஸ் கடமையினை செய்கின்றோம் என கூட்டத்தில் கலந்துகொண்ட யாழ்ப்பாண பிரிவு உதவி பொலிஸ் அத்தியட்சகர் யரூல் தெரிவித்தார்.