உலகில் வரவேற்கப்பட்ட இடங்களின் வரிசையில் முதலிடம் பெற்ற இலங்கையின் முக்கிய சுற்றுலா தளம்!
2025 ஆம் ஆண்டில் உலகின் மிகவும் வரவேற்கப்பட்ட இடங்களின் வரிசையில் இலங்கையின் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றான சீகிரியா முதலிடத்தில் உள்ளது.
360 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட Booking.com என்ற வலைத்தளம், சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான வசதிகளை வழங்குவதற்காக வழங்கப்படும் சேவையைப் பாராட்டி, உலகின் மிகவும் பிரபலமான இடங்களில் ஒன்றாக சீகிரியா பெயரிடப்பட்டுள்ளது.
Booking.com என்ற வலைத்தளம், அதன் 13வது பயணிகள் மதிப்பாய்வு விருதுகளுடன் இணைந்து இதனை வௌியிட்டுள்ளது.
சிகிரியாவின் சிறப்பு
சிகிரியா இலங்கையின் இணையற்ற கலைப் பாரம்பரியத்தின் சின்னமாகக் கருதப்படுகிறது. இது மாத்தளை மாவட்டத்தில் தம்புள்ள நகரத்திற்கு அண்மையில் அமைந்துள்ளது.
1144-அடி உயரமான இக்குன்றினுள் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சித்திரங்கள் பல உள்ளன. இவை 6-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாகும்.
மாபெரும் கலைக்கூடமான சிகிரியா மத்திய மாகாணத்தின் மாத்தளை மாவட்டத்துக்குரிய இனாமலு கோரளையில் அமைந்துள்ளது. கி.பி. 5ம் நூற்றாண்டில் அநுராதபுர கால தாதுசேன மன்னனின் மகனான காசியப்பன் மன்னனால் கட்டப்பட்டதாகும்.
இலங்கையின் சித்திரக் கலை வரலாற்றில் செந்நெறிப் பண்புகளை இவ் ஓவியங்கள் கொண்டுள்ளன. ஆசியாவில் உள்ள தொல்பொருள் முக்கியத்துவமுள்ள ஸ்தானங்களில் ஒன்றான இது ஓர் உலக மரபுரிமையாக உள்ளது.
இங்குள்ள கட்டிட கலை அமைப்புக்களிடையே வில்வளைவு, படிவரிசை, அகழி, குளம் என்பனவற்றைக் கொண்ட கற் பூங்கா சிறப்பானதாகும்.
சிகிரியாக் குன்றின் அடிவாரத்தில் உள்ள சிங்கப் பாதங்கள், கண்ணாடிச் சுவர், குன்றின் உச்சியில் உள்ள அரசமாளிகை இடிபாடுகள் போன்றவை கட்டடக் கலைத்துறை முக்கியத்துவமுள்ள அம்சங்களாகும்.