ரோஹிங்கியா ஏதிலிகள் தொடர்பில் இரக்கம் காட்டுங்கள்
இலங்கையில் அடைகலம் புகுந்துள்ள மியான்மார் ரோஹிங்கியா புகலிடக்கோரிக்கையாளர்கள் தொடர்பில் இலங்கையிடமிருந்து தொடர்ந்தும் இரக்கத்தையும் விருந்தோம்பலையும் எதிர்பார்ப்பதாக அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த ரோஹிங்கியா அகதிகளை காப்பாற்றி பாதுகாப்பாக தரையிறங்குவதற்கு அனுமதி வழங்கிய இலங்கையின் உயிர்காக்கும் செயற்பாட்டை பாராட்டியுள்ள UNHCR இலங்கை அதிகாரிகளிடமிருந்து தொடர்ந்தும் இரக்கத்தையும் விருந்தோம்பலையும் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளது.
இந்த புதிய வருகையாளர்களிற்கு தொடர்ந்தும் இரக்கம் மற்றும் விருந்தோம்பலை காண்பிக்குமாறு நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம்,என தெரிவித்துள்ள UNHCR பேச்சாளர், இவர்களில் பலர் பலவீனமான நிலையில் உள்ள பெண்கள் குழந்தைகள்,இயலாமை காரணமாக அவர்கள் ஆபத்தான முயற்சியில் தங்கள் உயிர்களை பணயம்வைத்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.
அதோடு பாதுகாப்பினை தேடி கடல்பயணங்களிற்கு பொருத்தமற்ற படகில் அவர்கள் பல வாரங்கள் பயணித்துள்ளார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிதாக வருபவர்கள் பாதுகாப்பாக தரையிறங்குவதை உறுதிசெய்வதும், உயிர்காக்கும் உரிமைகளை பெறுவதை உறுதி செய்வதும் எங்களின் முன்னுரிமைக்குரிய விடயங்கள் என தெரிவித்துள்ள அவர், புதிதாக வந்துள்ளவர்களின் பாதுகாப்பிற்காக இலங்கை அரசாங்கம் மற்றும் ஐநாவுடன் ஒருங்கிணைந்து செயற்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.