ராகமையில் துப்பாக்கிச்சூடு சம்பவம்: வெளியான பல அதிர்ச்சி தகவல்கள்!
ராகமை பகுதியில் வெளிநாடொன்றில் தலைமறைவாகியுள்ள "வெல்லே சாரங்க" என்ற குற்றவாளியின் நெருங்கிய உறவினர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் இன்றையதினம் (21-02-2024) காலை 7.30 மணியளவில் ராகமை, மஹாபாகே பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
"வெல்லே சாரங்க"வின் போட்டியாளரான துபாய் நிபுனவின் தரப்பினால் இந்தக் கொலை மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ராகமை, மஹாபா, எலப்பிட்டிவல பகுதியில் பன்றி இறைச்சி கடை ஒன்றின் உரிமையாளரைக் குறிவைத்து இன்று காலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் ரிவோல்வர் ரக துப்பாக்கியால் குறித்த நபரை சுட்டுவிட்டு தப்பியோடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் ஜா-எல - வடக்கு படகம பகுதியைச் சேர்ந்த 42 வயதான தொன் சுஜித் உக்குக்வா என்பவரே உயிரிழந்துள்ளார்.

இவர் தற்போது வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள "வெல்லே சாரங்க" என்ற குற்றவாளியின் சகோதரியின் கணவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
முன்னதாக, “வெல்லே சாரங்க”வின் போட்டியாளராக கருதப்படும் மற்றொரு குற்றவாளியான துபாய் நிபுனவின் தரப்பினரால் உயிரிழந்த நபருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதன் காரணமாக கடைக்கு வரவேண்டாம் என பொலிஸார் அறிவித்திருந்தனர்.
அது தொடர்பில் “வெல்லே சாரங்கவும்” தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், குறித்த கடையில் பொலிஸ் கையொப்பப் புத்தகமும் காணப்பட்டதாக தெரியவந்துள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில் கொல்லப்பட்ட நபருக்கு நேற்று பிற்பகல் டுபாய் நிபுனவின் தரப்பினரால் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது.
இருப்பினும், அதனை புறக்கணித்து விட்டு இன்று காலை அவர் கடைக்கு வந்த போது கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பல பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.