இலங்கை தொழிலதிபர் கொலையில் திடுக்கிடும் தகவல்கள்; பக்கா பிளான்; சிக்குவாரா வெளிநாட்டு மனைவி!
இந்தோனேசியாவில் உள்ள ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பில் ஒபெக்ஸ் ஹோல்டிங் குழுமத்தின் உரிமையாளர் ஒனேஷ் சுபசிங்க மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் பல திடுக்கிடும் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, 1.5 மில்லியன் டொலர் பெறுமதியான ஆயுள் காப்புறுதி மற்றும் பல பில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களை பெற்றுக் கொள்வதற்காக இந்தக் கொலை இடம்பெற்றமை விசாரணையில் வெளிவந்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கூறியுள்ளனர்.
மனைவி தப்பியோட்டம்
வர்த்தகர் ஒனேஷ் சுபசிங்க கொலையில் அவரது மனைவி மற்றும் அவரது தோழி ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கணவர் மரணத்தின் பின்னர் பிரேசிலுக்கு தப்பிச் சென்ற அவரது மனைவி, அவரது சொத்தை உடைமையாக்க பல்வேறு யுக்திகளை கையாண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஒனேஷ் சுபசிங்க மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட பின்னர், அவரது பிரேசில் மனைவி மற்றும் அவரது தோழி ஒனேஷின் கிரெடிட் கார்டுகள், மொபைல் போன்கள், மில்லியன் கணக்கான மதிப்புள்ள கைக்கடிகாரம் மற்றும் பல விலையுயர்ந்த பொருட்களுடன் தப்பிச் சென்றதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தொழிலதிபர் ஒனேஷ் சுபசிங்கவின் பிரேசிலைச் சேர்ந்த மனைவி, நான்கு வயது மகள் மற்றும் மற்றொரு பிரேசில் பெண் ஆகியோர் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்தனர்.
திட்டம்போட்டு கொலை
இந்தோனேஷியாவிற்கு உல்லாசப் பயணம் செல்லும் போது ஒனேஷின் மனைவி இலங்கையில் அவருக்குச் சொந்தமான பெறுமதியான பொருட்களில் கணிசமான தொகையை எடுத்துச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தோனேசியாவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் விசேட பொலிஸ் குழு ஒன்று ஒனேஷ் சுபசிங்க கொலைச் சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.
இந்நிலையில் கணவனைக் கொல்லும் திட்டத்தை நிறைவேற்றுவதற்காகவே இந்த உதவியாளரை அவரது மனைவி இலங்கைக்கு அழைத்து வந்துள்ளதாகவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
ஒனேஷ் சுபசிங்க தனது பிரேசிலைச் சேர்ந்த மனைவி ரோசா சில்வா, நான்கு வயது மகள் மற்றும் பிரேசிலிய பணிப்பெண் ஆகியோருடன் கடந்த ஜனவரி 20ஆம் திகதி இந்தோனேசியாவுக்குச் சென்றிருந்தார்.
இந்நிலையில் இரு பெண்களும் அங்கிருந்து ஒனேஷ் சுபசிங்கைக் கொல்ல திட்டம் தீட்டியிருக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஒனேஷ் சுபசிங்கவை இலங்கையில் வைத்து கொலை செய்து பிரேசிலுக்கு தப்பிச் செல்ல இரண்டு சந்தேகத்திற்கிடமான பெண்களும் திட்டமிட்டிருந்ததாகவும், அதனால் அவரை வெளிநாட்டிற்கு அழைத்துச் சென்று அங்கு மர்மமான முறையில் கொலை செய்ததாகவும் பொலிசார் சந்தேகம் தெரிவித்தனர்.
தொழில் நிமித்தமாக அந்நாட்டில் இருந்து வாட்ஸ்அப் மூலம் தனது அலுவலக அதிகாரிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், ஆனால் கடந்த ஜனவரி 31ம் திகதி முதல் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் தெரியவந்துள்ளது.
ஜகார்த்தாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு மூடப்பட்டிருந்த , ஊழியர்கள் கதவைத் திறந்து பார்த்தபோது, அவரது சடலம் அங்கு காணப்பட்டது. பெப்ரவரி 03 ஆம் திகதி அதன் நிர்வாகம் ஒனேஷ் சுபசிங்கவின் பிரத்தியேக செயலாளருக்கு இதுபற்றி அறிவித்தது.
வீட்டு வளாகத்தின் நிர்வாகம் சிசிடிவியை சோதனை செய்தபோது, ஜனவரி 31 ஆம் திகதி அன்று வாசலில் “DON’T DISTURB” என்ற பலகையை கதவில் ம் மாட்டி விட்டு ஒனேஷ் சுபசிங்கவின் மனைவி, நான்கு வயது மகள் மற்றும் பணிப்பெண் ஆகியோர் வீட்டை விட்டு வெளியேறிச்சென்றுள்ளமை தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.