காற்று மாசடைதல் தொடர்பில் வைத்தியர் விடுத்துள்ள அதிர்ச்சி தகவல்
உலகளாவிய ரீதியில் வருடாந்தம் வளி மாசடைதல் காரணமாக சுமார் 7 மில்லியன் பேர் ஆயுட்காலம் நிறைவடைவதற்கு முன்னரே உயிரிழப்பதாக சுவாச நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர்களின் சங்கத் தலைவர் சுவாச நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் நிரஞ்சன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
புதன்கிழமை (5) சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாம் வாழும் சூழலில் உள்ள வளி மாசடைந்திருக்குமாயின் எம்மால் காற்றை சுவாசிக்காமல் இருக்க முடியாது. நாளாந்தம் 10 ஆயிரம் லிட்டர் காற்றை உள்ளெடுத்து வெளியிடுகிறோம்.
அவ்வாறு உடலை வந்தடையும் வளியில் உள்ளடங்கியுள்ள நச்சுப் பதார்த்தங்களும், தீங்கு விளைவிக்கும் காரணிகளும் நுரையீரல் மாத்திரமல்லாமல் உடல் முழுவதும் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை என ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் ஒருவரது ஆயுட்காலமும் குறைவடைந்துச் செல்வதாக தெரியவந்துள்ளது. வருடாந்தம் வளி மாசடைதல் காரணமாக சுமார் 7 மில்லியன் பேர் ஆயுட்காலம் நிறைவடைவதற்கு முன்னரே உயிரிழப்பதாக, 70 ஆயிரம் ஆய்வு முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
இது மிகப் பெரிய தொகையாகும். வெளியிடங்கள் மற்றும் வீட்டின் உட்புற சூழலில் நிகழும் காற்று மாசு என்பன சுவாச நோய்களை ஏற்படுத்துவதுடன் நாட்பட்ட நோயாளர்களின் நோய் நிலைமையை தீவிரப்படுத்துகிறது.
புகைப்பிடித்தல் உள்ளிட்ட ஏனைய காரணிகளால் ஆண்களே அதிகளவில் நுரையீரல் புற்றுநோயால் பாதிப்புக்குள்ளாகின்றனர்.
எனினும் அண்மைகாலமாக பெண்கள், புகைப்பிடிக்கும் பழக்கம் இல்லாதவர்களிடையேயும் நுரையீரல் புற்றுநோய் அதிகரித்துள்ளதாகவும், இதற்கு வளி மாசடைதலே பிரதான காரணம் என இந்திய ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது.
காற்றில் உள்ள நுண்ணுயிர் கிருமிகள் சுவாசத்தின் ஊடக உடலினுள் சென்று இரத்த அணுக்களுடன் கலப்பதால் அடுத்த தலைமுறையினரும் சுவாச நோய்களுக்கு ஆளாக வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
கர்ப்பிணித் தாய் ஒருவர் நச்சு வாயுக்கள் அடங்கிய காற்றை சுவாசிப்பதால் அவற்றின் தாக்கம் கருவில் உள்ள குழந்தையையும் பாதிக்கலாம் என்றார்.